சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் ஓர் ஆண், ஒரு பெண் என இருவர் இன்று (மார்ச் 21) காலை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
75 வயதான சிங்கப்பூர் குடிமகள் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி நிமோனியா பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கிருமித்தொற்று இருப்பது அதே நாளில் உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு 26 நாட்கள் தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.52 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு இதயப் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை போன்றவை இருந்தது குறிப்பிடத்தக்கது.
64 வயதான இந்தோனீசிய ஆடவர் இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் இந்தோனீசியாவிலிருந்து மார்ச் 13ஆம் தேதிதான் சிங்கப்பூருக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது.
சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு அவர் இந்தோனீசியாவில் நிமோனியாவுக்காக சிகிச்சை பெற்றதாகக் கூறப்பட்டது.
அவருக்கு மார்ச் 14ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.15 மணிக்கு உயிரிழந்தார்.அவருக்கு முன்பே இதயப் பிரச்சினை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சும் தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையமும் அவ்விருவரின் குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டுள்ளன.
இது வருத்தமளிக்கக்கூடியதாக, அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தாலும் சிங்கப்பூரர்கள் தைரியத்துடன், தங்களது பங்கை ஆற்றி கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் குறிப்பிட்டார்.
#சிங்கப்பூர் #கொரோனா #மரணம்

