சிங்கப்பூரில் புதிதாக 47 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை இன்று (மார்ச் 21) சிங்கப்பூர் சுகாதார அமைச்சு உறுதி செய்தது . கிருமித்தொற்று கண்டவர்களில் 39 பேர் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியான், ஆசியாவின் சில நாடுகளுக்கும் சென்று சிங்கப்பூருக்கு வந்தவர்கள் என்று கூறப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து, இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூர்வாசிகள் அல்லது நீண்டகாலம் இங்கு தங்கியிருப்பதற்கான அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள். ஆறு பேர் மட்டும் குறுகியகால அனுமதியுடன் இங்கு வந்தவர்கள்.
எஞ்சியுள்ள 8 பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று கண்டவர்கள். அவர்களில் இருவருக்கு முன்பே கிருமித்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு உண்டு. மற்ற ஆறு பேருக்கும் முந்தைய சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாக தற்போதைக்கு தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் சேர்த்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 432ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 290 பேரில் பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக உள்ளது, அல்லது மேம்பட்டு வருகிறது. எனினும், 14 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்று கிருமித்தொற்று கண்ட 64 வயது இந்தோனீசிய மாது (கிருமித்தொற்று கண்ட 415வது நபர்), இன்று சிங்கப்பூரில் உயிரிழந்த ஒருவருடன் (கிருமித்தொற்று கண்ட 212வது நபர்) தொடர்பில் இருந்தவர் என்று கூறப்பட்டது.
#சிங்கப்பூர் #கொரோனா


