சிங்கப்பூரில் புதிதாக 54 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை இன்று (மார்ச் 21) சிங்கப்பூர் சுகாதார அமைச்சு உறுதி செய்தது . கிருமித்தொற்று கண்டவர்களில் 48 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் என்று கூறப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து, இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூர்வாசிகள் அல்லது நீண்டகாலம் இங்கு தங்கியிருப்பதற்கான அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள். ஒருவர் மட்டும் குறுகியகால அனுமதியுடன் இங்கு வந்தவர்கள்.
சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர்வாசிகள் அல்லது நீண்டகாலம் இங்கு தங்கியிருப்பதற்கான அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் உட்பட சிங்கப்பூருக்குள் வரும் அனைவரும் குடிநுழைவு அனுமதி பெறுவதற்கு முன்பாகவே, இணையம் வழியாக சுகாதார உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ள நிலையில் ஆக அதிகமாக இன்று 54 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 8 பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று கண்டவர்கள். அவர்களில் இருவருக்கு முன்பே கிருமித்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு உண்டு. மற்ற ஆறு பேருக்கும் முந்தைய சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாக தற்போதைக்கு தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள்; 20 முதல் 74 வரையிலான வயதுடையவர்கள் அவர்கள் என்று கூறப்பட்டது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஆறு பேர் வேறு நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கவில்லை. முந்தைய கிருமித்தொற்று சம்பவங்களுடன் இவர்களுக்குத் தொடர்பிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்படவில்லை.
சிங்கப்பூரில் மொத்தம் 509 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 15 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய எட்டு பேரையும் சேர்த்து மொத்தம் 152 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்புடையதாக 8,351 அடையாளம் காணப்பட்ட நிலையில் 2,529 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, 5,822 தடைகாப்பு ஆணையை நிறைவேற்றியுள்ளனர்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வர்த்தகங்களுக்கு உதவும் விதத்திலான கூடுதல் உதவித் திட்டங்களை வரும் வியாழக்கிழமை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் 343,000க்கும் அதிகமானோர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,900 உயிரிழந்துள்ளனர்.
#சிங்கப்பூர் #கொரோனா #கொவிட்-19

