மூத்தோர், கர்ப்பிணிகள், உடற்குறையுள்ளோர் பேரங்காடிகளில் பொருட்கள் வாங்க சிறப்பு ஏற்பாடு

மூத்தோர், கர்ப்பிணிகள், உடற்குறையுள்ளோர் பேரங்காடிகளில் பொருட்கள் வாங்க சிறப்பு ஏற்பாடு

2 mins read
a9af1ad9-1f7e-4231-b01b-217a2c9bf772
ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் செயல்படும் முதல் ஒரு மணி நேரம், மேற்கூறப்பட்ட அந்த மூன்று பிரிவினருக்காக ஒதுக்கப்படும். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

கொரோனா கிருமி பரவி வரும் இந்தக் காலத்தில், என்டியுசி ஃபேர்பிரைஸ், கோல்டு ஸ்டோரேஜ், ஜயன்ட் போன்ற பேரங்காடிகளில் பொருட்களை வாங்க வரும் மூத்தோர், கர்ப்பிணிகள், உடற்குறையுள்ளோரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பொருள் வாங்க அவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

அதாவது, பொருட்களை வாங்க அவர்களுக்காக வாரத்தில் ஒரு மணி நேரம் தனியாக ஒதுக்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் நிறுவனமும் டெய்ரி ஃபார்ம் சிங்கப்பூர் நிறுவனமும் இன்று தெரிவித்தன. கோல்டு ஸ்டோரேஜ், ஜயன்ட், மார்க்கெட் பிளேஸ், ஜேசன்ஸ் டெலி ஆகிய நிறுவனங்களை டெய்ரி ஃபார்ம் சிங்கப்பூர் நிர்வகிக்கிறது.

தீவு முழுவதும் இருக்கும் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் அனைத்திலும் இந்த நடைமுறை வரும் திங்கட்கிழமையிலிருந்து நடப்பிற்கு வரும்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் செயல்படும் முதல் ஒரு மணி நேரம், மேற்கூறப்பட்ட அந்த மூன்று பிரிவினருக்காக ஒதுக்கப்படும்.

24 மணி நேரம் செயல்படும் பேரங்காடிகளில், காலை 7 மணி முதல் 8 மணி வரை அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல முடியும்.

டெய்ரி ஃபார்ம் சிங்கப்பூர் நிறுவனம் நிர்வகிக்கும் பேரங்காடிகளில் இந்த வாரம் முதல் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் முதல் ஒரு மணி நேரம் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இத்தகைய பிரிவினருக்காக ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொது இடங்களில் மக்களுக்கு இடையே தூர இடைவெளியை அதிகரிப்பது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாப்பது உள்ளிட்டவை தொடர்பாக சுகாதார அமைச்சு பரிந்துரைகளை வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து மேற்கண்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

"இந்த ஏற்பாட்டின் மூலம் மூத்தோர் உட்பட எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது. அவர்களுக்குக் கூடுதல் நேரமும் இடவசதியும் வழங்கப்படுகிறது. மாறிவரும் சூழலில் வாடிக்கையார்களின் நலன் கருதி, தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய எண்ணியிருக்கிறோம்," என்று ஃபேர்பிரைஸ் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியன் பெங் கூறினார்.

மேற்குறிப்பிடப்பட்ட நேரத்தில் பொருள் வாங்க முன்னோடித் தலைமுறையினர் தங்களின் முன்னோடித் தலைமுறை அட்டையை ஃபேர்பிரைஸ் ஊழியர்களிடம் காட்ட வேண்டும்.

முன்னோடித் தலைமுறையினருக்காக திங்கட்கிழமைகள் புதன்கிழமைகள் வழங்கப்படும் கூடுதல் சலுகை அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

மேற்குறிப்பிடப்பட்ட நேரத்தில் பொருள் வாங்க வரும் கர்ப்பிணிகள் மற்றும் உடற்குறையுள்ளவர்கள், தங்களது நிலை குறித்து ஃபேர்பிரைஸ் நுழைவாயிலில் உள்ள ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

#சிங்கப்பூர் #கொவிட்-19 #ஃபேர்பிரைஸ் #டெய்டி ஃபார்ம் சிங்கப்பூர் #கோல்டு ஸ்டோரேஜ் #ஜயன்ட் #மார்க்கெட் பிளேஸ்

குறிப்புச் சொற்கள்