சிங்கப்பூரில் மேலும் 49 பேருக்கு கிருமித்தொற்று; 32 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்

சிங்கப்பூரில் புதிதாக 49 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை இன்று (மார்ச் 24) சிங்கப்பூர் சுகாதார அமைச்சு உறுதி செய்தது. 

கிருமித்தொற்று கண்டவர்களில் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் என்று கூறப்பட்டது. 

அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூருக்குத் திரும்பும் மாணவர்கள், பணியாளர்கள் என்று கூறப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து திரும்பி, இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 25 பேர் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள்.

வேறு ஐவர் இங்கு நீண்டகாலம் தங்கியிருப்பதற்கான அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் என்று அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 14 பேர் பிரிட்டனிலிருந்தும் ஐவர் அமெரிக்காவிலிருந்து திரும்பியவர்கள்.

மற்றவர்கள் மலேசியா, பிரான்ஸ், இந்தோனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து திரும்பியவர்கள்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட உள்ளூர் சம்பவங்கள் 17ல் 13 பேருக்கு முந்தைய சம்பவங்களுடன் தொடர்பு இல்லை. அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணமும் மேற்கொள்ளவில்லை. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.

இன்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 558ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 156 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில்  17 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளை அமைச்சர்நிலை குழு இன்று அறிவித்தது.

அதன்படி, வேலை, பள்ளி தவிர மற்ற இடங்களில் 10 பேருக்கு குறைவானவர்களே கூட முடியும். அவர்களும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். 

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என சிங்கப்பூர்வாசிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நிலையில், அதையும் மீறி வெளிநாடுகளுக்குச் செல்வோர், கிருமித்தொற்று தொடர்பான சிகிச்சை பெற வேண்டியிருந்தால் அதற்கான முழுச் செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் என்றும் அதில் கட்டணச் சலுகை எதுவும் வழங்கப்படாது என்றும் இன்று தெரிவிக்கப்பட்டது.

மதுக்கூடங்கள், இரவு நேர கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், கரவோக்கே நிலையங்கள் உட்பட சிங்கப்பூரின் அனைத்து பொழுதுபோக்கு இடங்களும் மூடப்படுகின்றன.  

துணைப்பாட வகுப்புகள், மேம்பாட்டு வகுப்புகள் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன.

வரும் வியாழக்கிழமை (மார்ச் 26) இரவு 11.59 மணிக்கு நடப்புக்கு வரும் இந்த நடைமுறைகள், குறைந்தபட்சம் அடுத்த மாத இறுதி வரை நடப்பில் இருக்கும் என்று கூறப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் (மார்ச் 26) வரையில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிருமித்தொற்றின் சீற்றம் குறையாததை அடுத்து பின்னர் அறிவிக்கப்படும்வரை பள்ளிவாசல்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என முயிஸின் தலைமை நிர்வாகி ஈசா மசூத் தெரிவித்தார்.

உலக அளவில் இதுவரை 378,000 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

#சிங்கப்பூர் #கொவிட்-19

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!