'ஆலோசனைகளை மீறி வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூர்வாசிகள், தொற்று ஏற்பட்டால் சிகிச்சை செலவை தாங்களே ஏற்க வேண்டும்'

கொவிட்-19 கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசாங்கம் நேற்று (மார்ச் 24) மாலை அறிவித்தது.

நாளை மறுதினம் மார்ச் 27 முதல் வெளிநாடு செல்லும் சிங்கப்பூர்வாசிகளும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரும் இங்கு திரும்பிவரும்போது கொவிட்-19 கிருமித்தொற்று சிகிச்சைக்காகப் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் சிகிச்சைக்கான மானியம் பறிக்கப்பட்டு அவர்களிடமிருந்து முழுக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று நேற்று நடைபெற்ற அமச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும், பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அந்த சிகிச்சைகளுக்காகச் செலவழித்த தொகையை மெடிஷீல்ட் அல்லது ஒருங்கிணைந்த ஷீல்ட் திட்டங்களிலிருந்து அவர்கள் திரும்பப்பெற இயலாது.

புதிய கட்டுப்பாடுகளுக்கான அவசியம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், “உலகம் முழுவதும் வெவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வேலையிடங்கள் மூடப்பட்டுள்ளன. கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சாலைகளில் நடமாட்டம் இல்லை. ஒவ்வொருவரும் வீட்டில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழல் சிங்கப்பூரில் இல்லை என்றபோதிலும் நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. நமது குடும்ப உறுப்பினர்களையும் நம்மைச் சுற்றி இருப்போரையும் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுத்தாக வேண்டும்,” என்றார்.

புதிய அறிவிப்பிற்கிணங்க எல்லா சமயச் சேவைகளும் பிரார்த்தனைக் கூட்டங்களும் நிறுத்தப்படும். தனிப்பட்ட சமய நிகழ்வுகளுக்காகவும் அத்தியாவசிய சடங்குகளுக்காகவும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டிருப்பினும் அவற்றில் பங்கேற்போரின் எண்ணிக்கை 10க்குள் இருக்க வேண்டும்.

கடைத்தொகுதிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியன மூடப்படாவிட்டாலும் அவற்றில் ஒன்றாகப் பலர் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டில் தங்கி இருக்கும் உத்தரவை மீறுவோருக்கு $10,000க்குக் குறையாத அபராதமும் ஆறு மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

மேலும், அமைச்சுகள்நிலை பணிக்குழு சிங்கப்பூரர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளது.

திருமணம், பிறந்தநாள் ஆகிய கொண்டாட்டங்களாக இருந்தாலும் பத்துப் பேருக்கு மேல் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கும் சமூக நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யவோ கலந்துகொள்ளவோ வேண்டாம் என்பதே அது.

இறுதிச்சடங்குகளில்கூட,  இயன்றவரை சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கலாம்.

“நண்பர்களும் உறவினர்களும் இறுதிச்சடங்குகளில் பங்கேற்பதும் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதும் தேவையானவை என்பதை நாங்கள் புரிந்திருக்கிறோம் என்றபோதிலும் இதுபோன்ற சமூக ஒன்றுகூடல்களில் பங்கேற்பதைக் குறைத்துக்கொள்வதன் மூலம் கிருமி பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு அவர்களும் துணைபுரிய முடியும்,” என்று குழு தெரிவித்தது.

மூத்த குடிமக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அந்த நிறுத்தம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சு கூறியது. 

#சிங்கப்பூர் #கொவிட்-19 #புதிய அறிவிப்புகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!