சிங்கப்பூரில் புதிய 73 சம்பவங்கள்; 18 பேருடன் ஃபெங்ஷான் பிசிஎஃப் பாலர்பள்ளி புதிய தொற்று வட்டாரம்

சிங்கப்பூரில் புதிதாக 73 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை இன்று (மார்ச் 25) சிங்கப்பூர் சுகாதார அமைச்சு உறுதி செய்தது. அதனையடுத்து இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டு புதிய கிருமித்தொற்று வட்டாரங்கள் உருவாகியுள்ளன. அவற்றில் ஒன்று 18 கிருமித்தொற்று சம்பவங்களுடன் ஃபெங்ஷான் புளோக் 126ல் உள்ள ‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ்’ பாலர்பள்ளி தொடர்பானது. அங்கு 14 ஊழியர்களுக்கும் அவர்களில் 47 வயதான சிங்கப்பூர் குடிமகள் ஒருவரது (கிருமித்தொற்று கண்ட 601வது நபர்) நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது புதிய வட்டாரம் டோவர் கோர்ட் அனைத்துலகப் பள்ளியின் மூன்று ஊழியர்களை உள்ளடக்கியது.

இன்று உறுதி செய்யப்பட்ட 73 சம்பவங்களில் 38 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களில் 37 பேர் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியான் நாடுகள், ஆசியாவின் மற்ற நாடுகள் ஆகியவற்றுக்குச் சென்று திரும்பிய சிங்கப்பூர்வாசிகள், நீண்டகாலம் தங்குவதற்கான அனுமதிச்சீட்டு உடையவர்கள். 

இன்று உறுதிப்படுத்தப்பட்ட 27 சம்பவங்கள் ஏற்கெனவே கிருமித்தொற்றுகண்டவர்களுடன் தொடர்புடையவை; 8 சம்பவங்கள் முந்தைய கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்பில்லாதவை. அவர்கள் வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. தடமறியும் பணிகள் தொடர்கின்றன.

இன்று ஐவர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 160 பேர் முற்றிலும் குணமடந்துள்ளனர்.

மருத்துவமனையில் இருக்கும் 404 நோயாளிகளில் 17 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

கிருமித்தொற்றுகண்ட, ஆனால் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 65 பேர் கன்கார்ட் அனைத்துலக மருத்துவமனை, மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை, சமூகத் தனிமைப்படுத்தும் வளாகமான டி;ரிசோர்ட் என்டியுசி ஆகிய இடங்களில் தனிமையில் பராமரிக்கப்படுகின்றனர்.

#சிங்கப்பூர் #கொவிட்-19