சிங்கப்பூரில் மேலும் 49 பேருக்கு கிருமித்தொற்று; 3 சம்பவங்களுடன் புதிய குழுமமாக உருவெடுத்து உள்ளது சிங்போஸ்ட் நிலையம்

சிங்கப்பூரில் மேலும் 49 பேருக்கு கிருமித்தொற்று; 3 சம்பவங்களுடன் புதிய குழுமமாக உருவெடுத்து உள்ளது சிங்போஸ்ட் நிலையம்

2 mins read
4c6a7ee8-c2fd-44ba-9d62-cfc946647022
மூன்று கிருமித்தொற்று சம்பவங்களுடன் ஈனோசில் உள்ள சிங்போஸ்ட் நிலையம் புதிய கிருமித்தொற்று வட்டாரமாக உருவெடுத்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதிதாக 49 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மார்ச் 27) உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மூன்று கிருமித்தொற்று சம்பவங்களுடன் ஈனோசில் உள்ள சிங்போஸ்ட் நிலையம் புதிய கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்துள்ளது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 22 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த சிங்கப்பூர்வாசிகள் அல்லது நீண்டகால வருகை அட்டை வைத்திருப்பவர்கள். அவர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு அல்லது ஆசியாவின் இதர பகுதிகளுக்குச் சென்றவர்கள்.

உள்ளூரில் கிருமித்தொற்று கண்டவர்களில் ஐவர் ஃபெங்ஷான் பகுதியில் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியுடன் தொடர்புடையவர்கள்; மேலும் மூவர் டோவர் அனைத்துலகப் பள்ளி கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.

இன்றைய நிலவரப்படி, ஃபெங்ஷான் பாலர் பள்ளி கிருமித்தொற்று குழுமத்தில் மொத்தம் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 16 பேர் அங்கு பணிபுரிவோர்; 9 பேர் அந்தப் பள்ளி முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 18 பேருக்கு முந்தைய சம்பவங்களுடன் தொடர்பு உண்டு.

9 பேருக்கு முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லை. கிருமித்தொற்று தடமறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரை 183 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயினும் 432 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 17 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கிருமித்தொற்றுகண்ட, ஆனால் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 115 பேர் கன்கார்ட் அனைத்துலக மருத்துவமனை, மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை, சமூகத் தனிமைப்படுத்தும் வளாகமான டி;ரிசோர்ட் என்டியுசி ஆகிய இடங்களில் தனிமையில் பராமரிக்கப்படுகின்றனர்.

கொரோனா கிருமித்தொற்று தொடர்பான செய்திகளுக்கு தமிழ் முரசு இணையப்பக்கத்தை நாடுங்கள்!

#சிங்கப்பூர் #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்