சிங்கப்பூர்: அத்தியாவசியத் தேவையின்றி கடைத் தொகுதிகளுக்குச் செல்லாதீர்கள்; வீட்டிலேயே இருங்கள்

சிங்கப்பூர்: அத்தியாவசியத் தேவையின்றி கடைத் தொகுதிகளுக்குச் செல்லாதீர்கள்; வீட்டிலேயே இருங்கள்

2 mins read
1548d3cc-25ce-4f3e-8ed5-6310b005bb25
இன்று காலை செங்காங் கடைத்தொகுதிக்குள் நுழையக் காத்திருந்தவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி கடைத்தொகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பான இடைவெளி விதிமுறையை மெத்தனமாக எடுத்துக்கொள்ளாமல் அதைத் தீவிரமாகப் பின்பற்றும்படி அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் Gov.sg வாட்ஸ்அப் கணக்கு வழியாகப் பொதுமக்களுக்கு இன்று (மார்ச் 28) இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

உணவுப்பொருள் போன்ற இன்றியமையாத பொருட்களை வாங்குவதற்கு மட்டும் கடைத்தொகுதிகளுக்கும் பேரங்காடிகளுக்கும் செல்லும்படியும், பாதுகாப்பான இடைவெளியைப் பேணுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இணையம் வழியாக உணவு, மளிகைப் பொருட்களை வாங்குமாறும் அரசாங்கம் மக்களை ஊக்குவிக்கிறது.

கடைத்தொகுதிகளும் பேரங்காடிகளும் பாதுகாப்பான இடைவெளி விதிமுறையை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன. உச்ச நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் கடைக்குச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும் ஓய்வு நாட்களில் தங்களது தங்குமிடங்களிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு 11.59 மணியில் இருந்து பாதுகாப்பான இடைவெளி விதிமுறை நடப்பிற்கு வந்தது.

இந்த ஒழுங்குவிதிகளைப் பின்பற்றாத வர்த்தக நிறுவனங்களின் முதலாளிகளுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது $10,000 வரை அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

அதேபோல, அமர முடியாத வகையில் குறியிடப்பட்ட அல்லது ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்ட இருக்கைகளில் அமர்வோரும் அல்லது குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியின்றி வரிசையில் நிற்போரும் மேற்கண்ட தண்டனைகளை எதிர்நோக்கலாம்.

இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கும் கொரோனா கிருமித்தொற்று தொடர்பான கூடுதல் செய்திகளுக்கும் தமிழ் முரசு நாளிதழின் நாளைய (மார்ச் 29) அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#சிங்கப்பூர் #கொவிட்-19 #பாதுகாப்பான இடைவெளி

குறிப்புச் சொற்கள்