தேசிய சம்பள மன்றம்: 2வது வேலை செய்ய உள்ளூர் ஊழியர்களை அனுமதிக்கவும்

2 mins read
760a819e-e610-45fc-9939-beac27d36962
ராஃபிள்ஸ் பிளேசில் காணப்படும் அலுவலக ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமிப் பரவலால் வேலை நேரம் குறைக்கப்பட்ட அல்லது தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்ட உள்ளூர் ஊழியர்கள் கூடுதல் வருமானத்திற்காக இரண்டாவது வேலைக்குச் செல்ல விருப்பப்பட்டால் நிறுவனங்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று முத்தரப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

அத்தகைய ஊழியர்கள், வேறு நிறுவனங்களில் பகுதி நேர வேலை அல்லது தற்காலிக வேலையைத் தேட இயலும் என்று தேசிய சம்பள மன்றம் இன்று (மார்ச் 30) வெளியிட்ட வருடாந்திர வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

வேலைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில் சம்பளத்தைக் குறைத்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ள நிறுவனங்களுக்கான முக்கிய பரிசீலனைகளை மன்றம் பரிந்துரைத்துள்ளது.

ஆனால், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் முதலில் மற்ற செலவுகளைக் குறைக்கவேண்டும் என்றும் அரசாங்கத்தின் ஆதரவைப் பெறவேண்டும் என மன்றம் வலியுறுத்தி இருக்கிறது. அதன்பிறகு தேவைப்பட்டால் மட்டுமே சம்பளக் குறைப்பு நடவடிக்கை இடம்பெற வேண்டும்.

ஆகக் கடைசியாகத்தான் ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கையில் எடுக்க வேண்டும். அப்படி ஆட்குறைப்பு செய்ய நேர்ந்தால், அது பொறுப்புடன் மேற்கொள்ளப்படுவதையும் முத்தரப்பு மன்றம் அண்மையில் வெளியிட்ட ஆலோசனைகளின்படியும்

இடம்பெறுவதை நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முத்தரப்பு மன்றத்தில் நிறுவனப் பிரதிநிதிகளோடு, தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் அங்கம் வகிக்கின்றன.

"அனைவரும் ஐக்கியமாக இருந்து, இணைந்து பணியாற்றி, கொரோனாவால் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் குறைத்து, அதில் இருந்து மீண்டுவரும் நிலைமையில் சிங்கப்பூரை வைத்திருக்கும்படி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், ஊழியர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்," என தேசிய சம்பள மன்றம் தெரிவித்துள்ளது.

சம்பளத்தைக் குறைத்தாக வேண்டிய நிலைமையில் நிறுவனங்கள் இருந்தால், முதலில் அந்நிறுவனங்களின் நிர்வாகத்தினர் தங்களது ஊதியத்தைக் குறைத்துக் கொண்டு முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்றும் அதே நேரத்தில், முடிந்த அளவுக்கு 13வது மாத போனசை வழங்க முயலவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாத ஊதியமாக $1,400 வரை பெறும் குறைந்த வருமான ஊழியர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நிறுவனம் முழுமையும் சம்பளக் குறைப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டால், ஊதிய உயர்வு முடக்கப்பட வேண்டும் என மன்றம் கூறியுள்ளது. ஊதிய உயர்வை முடக்க அல்லது ஊதிய உயர்வு வழங்கத் திட்டமிட்டிருந்தால் குறைந்த வருமான ஊழியர்களுக்கு $50 வரை சம்பளத்தை உயர்த்துவதை நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும்.

இந்த இக்கட்டான சூழலில் தாமாக முன்வந்து நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் குறைந்த வருமான ஊழியர்களுக்கு, முடிந்தால் சிறப்புத் தொகை வழங்குமாறும் நிறுவனங்களுக்கு மன்றம் பரிந்துரைத்து இருக்கிறது.

நாளை மறுதினம் (ஏப்ரல் 1) முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரைக்குமான சம்பள மன்றத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் இம்முறை முன்கூட்டியே வெளியிடப்பட்டுவிட்டன. சிங்கப்பூர் பொருளியலிலும் உலகப் பொருளியலிலும் கொரோனா கிருமித்தொற்று ஏற்படுத்தி வரும் மோசமான பாதிப்பே இதற்குக் காரணம்.

(மேல் விவரம் நாளைய தமிழ் முரசு அச்சு பிரதியில்)

குறிப்புச் சொற்கள்