பிடோக் மாலில் உள்ள ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட் பேரங்காடியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று நேற்று (மார்ச் 31) உறுதி செய்யப்பட்டிருப்பதால், அந்தப் பேரங்காடி மூடப்பட்டுள்ளது.
பேரங்காடியை முழுமையாகத் தூய்மைப்படுத்துவதற்காக, அது மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் இம்மாதம் 4ஆம் தேதி திறக்கப்படும் என்றும் ஃபேர்பிரைஸ் இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கடையில் பொருட்களை அடுக்கும் பணியில் அந்தப் பெண் ஈடுபட்டிருந்தார் என்றும் வாடிக்கையாளர்களுடனான அவரது தொடர்பு மிகக் குறைவு என்றும் ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அந்த ஊழியர் மருத்துவப் பணியாளர்களால் கண்காணிக்கப்படும் வேளையில், அந்தப் பேரங்காடியில் பணிபுரியும் அனைவரும் கட்டாய விடுப்பில் உள்ளனர்.
கடந்த மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு அந்த ஊழியர் பணிக்குச் செல்லவில்லை. 26ஆம் தேதி விடுப்பில் இருந்த அவர், அதற்கு அடுத்த நாள் காய்ச்சலுக்காக மருத்துவரை அணுகினார். அந்த ஊழியர் தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட ஊழியருக்கு உதவி வருவதாகத் தெரிவித்த ஃபேர்பிரைஸ், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் அடையாளம் காண்பதில் அதிகாரிகளுக்கு உதவி வருவதாகவும் குறிப்பிட்டது.
கொவிட்-19 பரவல் தொடங்கியதிலிருந்தே தூய்மைப்பணியை அதிகப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஃபேர்பிரைஸ், அடிக்கடி தொடக்கூடிய கம்பிகள், டிராலிகள், பெட்டிகள், காசாளர் நிலையங்கள் போன்றவை நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தது.
பேரங்காடியின் ஊழியர்கள், பொருட்களைக் கொண்டுவந்து கொடுப்பவர்கள் ஆகியோரின் உடல் வெப்பநிலை தினமும் இரு முறை பதிவு செய்யப்படுவதாகவும் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கும் கிருமிநாசினி வைக்கப்பட்டிருப்பதாகவும் அது தெரிவித்தது.
#Fareprice #Bedok Mall #கொவிட்-19

