கொவிட்-19 தாக்கம்: தனிநபர்கள், நிறுவனங்களைப் பாதுகாக்கும் புதிய சட்டம்

தற்போதைய கொவிட்-19 சூழலால் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களை சரிவர நிறைவேற்ற முடியாத தனிநபர்கள், நிறுவனங்களைப் பாதுக்காக்கும் புதிய சட்டம் அறிமுகமாகவுள்ளது.

கொவிட்-19 சூழல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக முன்பணம் செலுத்தியவர்கள் போன்றோர், ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்ற முடியாதவர்களின் வைப்புத் தொகை பறிபோகாமல் இருக்க இந்த புதிய சட்டம் உதவும்.

கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகமாகும் என சட்ட அமைச்சு இன்று (ஏப்ரல்1) தெரிவித்தது.

இந்தச் சட்டம் விரைவாக அமலுக்கு வருவதற்கு நாடாளுமன்றத்தில் ஒரே நாடாளுமன்ற அமர்வில் மூன்று வாசிப்புகளையும் மேற்கொள்ள அனுமதிக்கும் அதிபர் கையொப்பம் இட்ட சிறப்பு ஆவணம் (சர்டிஃபிகேட் ஆஃப் அர்ஜன்சி) வகை செய்யும்.

இந்தப் புதிய மசோதா நிதி அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து உருவக்கப்பட்ட முழுமையான அரசு முயற்சி என்று குறிப்பிட்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், தனியார் நிறுவனங்கள், சட்ட நிறுவனங்களைச் சேர்ந்த குழு உறுப்பினர்களின் பங்கும் இதில் உண்டு என்றார்.

‘‘நிலைமை நாளுக்கு நாள் மோசமடைவதைப் பார்த்ததால் துரிதமாக இந்த மசோதாவை தயார் செய்தோம்,’ என்று திரு சண்முகம் கூறினார்.

ஐந்து வகையான ஒப்பந்தங்கள் குறித்த அம்சங்கள் புதிய சட்டத்தில் இடம்பெறும்.

குடியிருப்பு அல்லாத குத்தகைகள், கட்டுமான அல்லது விநியோக ஒப்பந்தங்கள், நிகழ்ச்சி ஒப்பந்தங்கள், சுற்றுலாத்துறை, பாதுகாப்பான கடன் வசதிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியன அவை.

உதாரணத்திற்கு இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்த பின்னர் ஹோட்டல்களில் அல்லது உணவு நிறுவனங்கள் போன்றவற்றிடம் திருமணம், விருந்து நிகழ்ச்சி ஆகியவற்றுக்காக ஏற்கெனவே முன்பணம் செலுத்தி கொரோனா கிருமித்தொற்றால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டாலோ தள்ளி வைக்கப்பட்டாலோ, கொடுத்த முன்பணத்தை அந்த ஹோட்டல்களும் உணவு நிறுவனங்களும் திரும்பக் கொடுக்க புதிய சட்டம் வகை செய்யும்.

மேலும் கொவிட்-19 பாதிப்பால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வர்த்தகம் மோசடைந்ததால் வாடகைக் கட்டத் தவறிய கடைக்காரர்களின் வர்த்தக குத்தகை ஒப்பந்தங்களை ரத்து செய்யவோ நில அல்லது சொத்து உரிமையாளர்கள் வாடகைதாரர்களை வெளியேற்றவோ முடியாது. எனினும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் இந்த நிவாரண காலத்தில் வாடகைத் தொகை ஒன்று சேர்க்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு கட்டினால் போதுமானது.

புதிய சட்டத்தின் மூலம் பணத் தட்டுப்பாடு இருக்கும் தனிநபர்களும் வர்த்தகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் நஷ்ட ஈடுகொடுப்பதிலிருந்தும் பாதுகாக்கப்படுவர்.

தற்போதைய தொற்றுநோய் பிரச்சினையால் உலகளவில் அரசாங்கங்கள் பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றால் இதுவரை எதிர்பார்க்காத/காணாத அளவு சமூக, பொருளியல் தாக்கம் ஏற்பட்டு தளவாடப் பிரச்சினைகளும் மனிதவள பற்றாக்குறைகளும் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்தப் புதிய சட்டத்தின் அவசியத்தை விளக்கியது சட்ட அமைச்சு.

“பல இடங்களில் தனிநபர்கள், வர்த்தகங்களின் சட்ட கடமைகள் நிறைவேற்ற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்காக அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது நியாயமற்றது.’’

புதிய சட்டம் இவ்வாண்டு பிப்ரவரி 1ஆம் தேதி அல்லது அதற்கு முன்னால் செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்குப் பொருந்தும்.

அந்த தேதிதான் கொவிட்-19 சிங்கப்பூரை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கத் தொடங்கிய தேதி என கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

கொவிட்-19 கிருமித்தொற்றைச் சமாளிக்க சிங்கப்பூரில் பல அமைச்சுகள் பணிக்குழு செயல்படத் தொடங்கிய மார்ச் 24ஆம் தேதி அல்லது அதற்கு முன்னால் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் இது பொருந்தும்.

புதிய சட்டத்தின்கீழ் எழும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண அமைச்சு கிட்டத்தட்ட 100 வழக்கறிஞர்கள் அல்லது கணக்காளர்களை மதிப்பீட்டாளர்களாக நியமிக்கும். சர்ச்சைகளுக்குத் தீர்வு காண வரும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக வழக்கறிஞர்களை நியமிக்க முடியாது. இதற்கு கட்டணம் இல்லை. மதிப்பீட்டாளர்களின் முடிவே இறுதியானது, மேல் முறையீடு செய்ய முடியாது.

பரிந்துரைக்கப்பட்ட ஆறு மாத காலம் முடிவடைந்த பின்னர் தேவை ஏற்பட்டால் சட்ட அமைச்சர் மேலும் ஆறு மாதங்களுக்கு நிவாரண காலத்தை நீட்டிக்கலாம்.

#சிங்கப்பூர் #கொவிட்-19 #புதிய சட்டம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!