சிங்கப்பூரில் புதிதாக 49 சம்பவங்கள்; முஸ்தஃபா நிலையம், ஒரு கட்டுமான தளம், கெப்பல் கப்பல் பட்டறை என 3 புதிய குழுமங்கள்

சிங்கப்பூரில் புதிதாக 49 சம்பவங்கள்; முஸ்தஃபா நிலையம், ஒரு கட்டுமான தளம், கெப்பல் கப்பல் பட்டறை என 3 புதிய குழுமங்கள்

2 mins read
c6d0bb67-089b-49ee-a394-4b1ef1e9e10e
முஸ்தஃபா நிலையம், மேக்ஸ்வெல் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானத் தளம், கெப்பல் கப்பல் பட்டறை ஆகியவை அந்த புதிய குழுமங்கள். படம்: SCREENGRAB FROM GOOGLE MAPS -
multi-img1 of 3

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 2) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 49 பேரையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 1,049 ஆகியுள்ளது.

புதிதாக மூன்று கிருமித்தொற்று குழுமங்கள் உருவாகியுள்ளன. முஸ்தஃபா நிலையம், மேக்ஸ்வெல் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானத் தளம், கெப்பல் கப்பல் பட்டறை ஆகியவை அந்த புதிய குழுமங்கள்.

இந்நிலையில் முஸ்தஃபா நிலையம் 14 நாட்களுக்கு மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையத்தின் கதவுகளில், அடுத்த அறிவிப்பு வரை மூடப்படுவதாக அறிக்கை ஒட்டப்பட்டிருந்தது.

இன்று உறுதி செய்யப்பட்ட சம்பவங்களில் 8 வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு ஏற்பட்ட கிருமித்தொற்று.

உள்ளூரில் ஏற்பட்ட 41 கிருமித்தொற்று சம்பவங்களில் 26 ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்புடையவை;.

புதிய 15 சம்பவங்களுக்கு முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லை. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் முயற்சி தொடர்கிறது.

இன்று 21 மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதையும் சேர்த்து மொத்தம் 266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 464 பேரில் 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இங்கு இதுவரை நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 315 பேர் கான்கோர்ட் இன்டர்நேஷன்ல் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, கிளனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் டி'ரிசார்ட் என்டியுசியில் உள்ள சமூக தனிமைப்படுத்தும் இடம் ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 26 வயது சிங்கப்பூர் குடிமகள் மார்ச் 2 முதல் 18 வரை இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.

அவர் மனநலக் கழகத்தில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியராகப் பணியாற்றுபவர். அறிகுறிகள் தென்பட்ட மார்ச் 20 முதல் அவர் பணிக்குச் செல்லவில்லை; நேற்று அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

#சிங்கப்பூர் #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்