கொவிட்-19: சிங்கப்பூரில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு

2 mins read
14a68089-8bbd-4008-b324-150dc08a006a
சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 918வது நபரான அவர் லீ ஆ மூய் ஓல்ட் ஏஜ் ஹோம் கிருமித்தொற்று குழுமத்தைச் சேர்ந்தவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் 5வது நபர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு இன்று (ஏப்ரல் 3) காலை அறிவித்தது.

இன்று உயிரிழந்த 86 வயதான சிங்கப்பூர் பெண்மணி, கிருமித்தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருக்கவில்லை.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 918வது நபரான அவர் லீ ஆ மூய் ஓல்ட் ஏஜ் ஹோம் கிருமித்தொற்று குழுமத்தைச் சேர்ந்தவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

மார்ச் 31ஆம் தேதி தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதே நாளில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று அதிகாலை 1.55 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தாருக்கு தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையம் உதவி வருகிறது.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று கடந்த ஜனவரி 23ஆம் தேதி உறுதி செய்யப்பட்டதிலிருந்து நிகழ்ந்த ஐந்தாவது மரணம் இது.

மார்ச் 21ஆம் தேதி 75 வயது சிங்கப்பூர் பெண்மணியும் 64 வயது இந்தோனீசிய ஆடவரும் உயிரிழந்தனர். அந்த மாதுக்கு நாட்பட்ட இதயநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ர பிரச்சினைகள் இருந்ததாகவும், ஆடவருக்கு இதயநோய் இருந்ததாகவும் கூறப்பட்டது.

மார்ச் 29ஆம் தேதி 70 வயது சிங்கப்பூரரான திரு சுங் ஆ லே கொவிட்-19ஆல் உயிரிழந்தார். அவருக்கு உயர் ரத்தக் கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருந்தன.

நேற்று உயிரிழந்த நான்காவது நபரான 68 வயது இந்தோனீசிய ஆடவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருந்தன.

#சிங்கப்பூர் #கொவிட்

குறிப்புச் சொற்கள்