'என்ன நடந்தாலும் ஃபேர்பிரைஸ் கடைகள் திறந்திருக்கும்; அவசரப்பட்டு வாங்கிக் குவிக்கத் தேவையில்லை'

பேரங்காடிகளுக்கு விரைந்து சென்று பதற்றத்துடன் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியமில்லை.

“என்ன நடந்தாலும்,” அனைத்து ஃபேர்பிரைஸ் கடைகளும் திறந்திருக்கும் என்று ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி சியா கியன் பெங் இன்று (ஏப்ரல் 3) கூறியுள்ளார்.

பேரங்காடிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எமது சக ஊழியர்கள் தங்களால் இயன்றவரை செய்துகொண்டிருக்கின்றனர். நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். செயல்படாமல் போகுமோ என்ற கவலை வேண்டாம்,” என்று தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடைகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் தங்களது வழக்கமான அளவிலிருந்து 150% அதிகமாக பொருட்களை வாங்கினால் அது மொத்தம் 225 விழுக்காடு அதிகம் பொருட்கள் வாங்குவதற்கு சமானம் என்று திரு சியா கூறினார்.

“இது மொத்த அமைப்புக்கும் கூடுதல் சுமையை ஏற்றும். சேமிப்புக் கிடங்குகளிலிருந்து பொருட்கள் கடைகளுக்கு வந்து சேர்ந்து அவை மீண்டும் அடுக்கப்படும் வரை கடைகளில் காலியான அலமாரிகளையே காண முடியும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அதனால், தயவுசெய்து பொறுமையாக இருங்கள்; விவேகமாக வாங்குங்கள்; பாதுகாப்பான இடைவெளி நடைமுறையைக் கடைப்பிடியுங்கள்,” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஏற்கெனவே இருக்கும் ஊழியர்களுக்கு உதவவும் கூடுதல் மனிதவளத்துக்கு ஃபேர்பிரைஸ் ஏற்பாடு செய்வதாகக் கூறிய திரு சியா, எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கடைகளில் கண்டால் அவர்களுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

“ஒன்றிணைந்து இந்தச் சூழலைக் கடப்போம்,” என்றது அவரது பதிவு.

#சிங்கப்பூர் #ஃபேர்பிரைஸ்