கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்கான புதிய முயற்சிகள் இன்று (ஏப்ரல் 8) முதல் முழுமையாக நடப்புக்கு வந்துள்ள நிலையில், தமது அலுவலகத்திலும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் இன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"கொரோனா கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான 'சர்கியூட் பிரேக்கர்' நடவடிக்கைகள் முழு வீச்சில் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
"அமைச்சரவைக் கூட்டம் இன்னும் இடம்பெறவில்லை. ஆனால், நாங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இரு வேறு இடங்களில் இருக்கிறோம், தொலைத்தொடர்பு மாநாடு வசதி வழியாக இணைந்துள்ளோம்.
"பாதுகாப்பான இடைவெளியை உறுதி செய்ய நாங்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் தள்ளி அமர்ந்திருக்கிறோம், முகக்கவசங்கள் அணிந்திருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான போரில் 'சர்கியூட் பிரேக்கர்' நடவடிக்கைகள் அவசியம் என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, "நாம் எதிர்பார்த்ததுபோலவே, கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது; முன்பைவிட அது வேகமாக அதிகரிக்கிறது. அந்த எண்ணிக்கையைக் குறைக்க, இந்தப் புதிய நடவடிக்கைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதுதான் ஒரே வழி," என்று குறிப்பிட்டார்.
"அத்தியாவசிய வேலைகள் அல்லது உணவுப்பொருள் வாங்க வெளியே செல்வதைத் தவிர மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருங்கள். சந்தைக்குச் செல்ல வேண்டியதிருந்தால் கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். பொழுதுபோக்குக்காக வெளியில் செல்லவோ அல்லது நண்பர்களைச் சந்திக்கவோ இது ஒரு மாதத்துக்கான விடுமுறை அல்ல," என்று அவர் மேலும் பதிவிட்டிருந்தார்.
"நம் அனைவரின் சுகாதாரம், நம் ஒவ்வொருவரின் செயல்களைப் பொறுத்தது," என்று குறிப்பிட்ட பிரதமர் அனைவரும் தங்களது பங்கினை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

