பிரதமர் லீ: கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; ஒன்றுகூடல்கள் கூடாது

பொது இடங்களில் ஒன்றுகூடல்களைக் கண்டால் அமலாக்க அதிகாரிகள் உடனடியாக எச்சரிக்கைக் கடிதத்தை வழங்குவர் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமிப் பரவலை முறியடிக்க அறிமுகப்படுத்தியுள்ள அதிரடி நடவடிக்கைகளை இன்று (ஏப்ரல் 9) முதல் அதிகாரிகள் மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவர் என்று எச்சரித்த பிரதமர், இன்னும் ஆங்காங்கே ஒன்றுகூடல்கள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.

பெரும்பாலான வேலையிடங்களை மூடுதல், தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் அனைத்து சமூக ஒன்றுகூடல்களுக்கும் தடை ஆகியவற்றை உள்ளடக்கிய கண்டிப்பான புதிய நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட மூன்றாவது நாளான இன்றும் இயற்கை வனப்பகுதிகள், சந்தைகள் உட்பட சில இடங்களில் கூட்டம் தென்பட்டது.

விதிமுறைகளை முதல்முறையாக மீறுவோருக்கு கடுமையான எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்படும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டிருந்தார். அத்தகைய விதிமீறல்களை இரண்டாவது முறை புரிவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படுவதுடன் மூன்றாவது முறையும் விதிமீறினால் அவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்.

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பது தொடர்பிலான நடவடிக்கைகளை “மிகவும் கண்டிப்பாக,” பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 142 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,623ஆக உயர்ந்துள்ளது.

“உங்களது அன்புக்குரியவர்களுக்கு இது எவ்வளவு கடுமையானது என்பது புரியவில்லையானால், தயவுசெய்து நீங்கள் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி புரியவையுங்கள். வீட்டிலேயே இருப்பது தொடர்பான நடவடிக்கைகளை நாம் எவ்வளவு தூரத்துக்கு சரிவர பின்பற்றாமல் இருக்கிறோமோ, அவ்வளவு நீண்ட காலத்துக்கு இந்த வேதனைமிகுந்த நடவடிக்கைகள் நடப்பில் இருக்க வேண்டியதிருக்கும்,” என்றார் திரு லீ.

“வழக்க நிலைக்குத் திரும்பிச் செல்ல நாம் அனைவரும் விரும்புவதை நான் அறிவேன்; ஆனால், தற்போதுள்ள நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றினால்தான் வழக்க நிலைக்குத் திரும்புவது சாத்தியமாகும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

நேற்று முன்தினம் நடப்புக்கு வந்த கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளின்படி, உணவுப்பொருட்கள் வாங்குதல், அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோர் வேலைக்குச் செல்லுதல், சற்று நேரம் தனியாக உலவுதல் போன்ற அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

வெளியிடங்களில் சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. கடைகளிலும்கூட உணவுப் பொட்டலங்களை வாங்கிக்கொண்டு செல்லலாமே தவிர அங்கு அமர்ந்து சாப்பிட முடியாது.

அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த் தளத்தில் அமர்ந்து சாப்பிட அடம்பிடித்த 71 வயது ஆடவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகளை மீறியதற்காக சுமார் 3,000 ஆலோசனைக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் அத்தகைய 7,000 கடிதங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களைப் பற்றிய தகவல்களை அமலாக்க அதிகாரிகள் உடனடியாகப் பதிவு செய்துகொள்வர் என்று திரு மசகோஸ் குறிப்பிட்டார். இதற்கு முன்பு, பொது இடங்களில் கூடியிருப்போரைக் கலைக்க வாய்மொழி எச்சரிக்கைகளை அதிகாரிகள் விடுத்து வந்தனர்.

“இந்த புதிய நடவடிக்கைகள் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட அனைவரது ஒத்துழைப்பும் தேவை. கொவிட்-19 சூழலை இன்னும் பலர் கடுமையானதாகக் கருதவில்லை,” என்று திரு மசகோஸ் குறிப்பிட்டார்.

“கடைகளில் சாப்பிடுவது, சந்தைகளில் வரிசையில் நிற்கும்போது பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, சாப்பிட அல்லது உடற்பயிற்சி செய்ய பூங்காக்களில் கூடுவது என பலர் ஒத்துழைப்பு நல்க மறுக்கின்றனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

அனைவரும் வீட்டிலேயே இருப்பதுடன் வெளியில் செல்லும்போது குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளிவிட்டு இருப்பதைக் கடைப்பிடிக்குமாறு திரு மசகோஸ் கேட்டுக்கொண்டார்.

“உங்களது குடும்ப உறுப்பினர்களை, குறிப்பாக, வயதானவர்களைவீட்டிலேயே இருக்குமாறு நினைவுபடுத்துங்கள். அவர்கள் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்கள், அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். வீட்டிலிருந்தபடியே கல்வி கற்கும் இளம் மாணவர்கள் தங்கள் நண்பர்களை இணையம் வழியாகச் சந்திக்குமாறு கோருங்கள். இளையவர், முதியவர் என்ற வேறுபாடின்றி, யாருக்கு வேண்டுமானாலும் கிருமித்தொற்று ஏற்படக்கூடும்,” என்று திரு மசகோஸ் தமது பதிவில் குறிப்பிட்டார்.

புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதியில் கூட்டத்தைக் கண்காணிக்க ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா வானவூர்திகளை தேசிய பூங்காக் கழகம் இன்று முதல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க, பொதுப் போக்குவரத்திலும் நிலையங்களிலும் அமர, நிற்க சாத்தியமுள்ள இடங்கள் குறியிட்டுக் காட்டப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. இந்த விதிமுறைகளைப் பயணிகள் பின்பற்றுவதை உறுதி செய்ய 100க்கு மேற்பட்ட போக்குவரத்து தூதர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!