இந்த வாரத்தில் கிட்டத்தட்ட 1,300 வெளிநாட்டு ஊழியர்கள் தற்காலிகமாக இரு சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம்களுக்கு படிப்படியாக மாற்றப்படவுள்ளனர். கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் தேசிய அளவிலான முயற்சிகளின் ஓர் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் இந்த ஒரு மாத காலத்திற்கு பிடோக் முகாம் II, ஜூரோங் முகாம் II ஆகிய இரு சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம்களில் அந்த ஊழியர்களைத் தங்கவைப்பதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து வருவதாக தற்காப்பு அமைச்சு நேற்று (ஏப்ரல் 9) ஃபேஸ்புக் மூலம் தெரிவித்தது.
அங்கு தங்க வைக்கப்படுவதற்கு முன்பாக ஊழியர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கிருமித்தொற்று இல்லாதவர்களை இங்கு தங்க வைப்பது நோக்கம்.
அங்கு தங்கியிருக்கும்போது ஊழியர்கள் கண்டிப்பான சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். நாளுக்கு இரு முறை உடல் வெப்பநிலையைக் கண்காணிப்பது, பாதுகாப்பான இடைவெளியை எல்லா நேரங்களிலும் கடைப்பிடிப்பது, மாறுபட்ட உணவு நேரங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.
அந்த ஊழியர்களுக்கு அவசரமாக தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து தரும்படி தேசிய வளர்ச்சி அமைச்சு கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.
பயன்படுத்தப்படாமல் இருந்த அந்த இரு முகாம்களும் ஆயுதப்படையின் தயார்நிலை நடவடிக்கைகளுக்குத் தேவைப்படாது என்றும் ஆயுதப் படையின் மற்ற முகாம்களில் இருந்து அவை பிரித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் தற்காப்பு அமைச்சின் ஃபேஸ்புக் பதிவு தெரிவித்தது.


