சிங்கப்பூரில் நேற்று (ஏப்ரல் 12) புதிதாக 233 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,532 ஆகியுள்ளது என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. இன்று உறுதிசெய்யப்பட்ட அனைத்து சம்பவங்களும் உள்ளூர் கிருமுத்தொற்று சம்பவங்கள்.
கடந்த மாதம் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு கிருமித்தொற்று அதிகமாக இருந்த நிலையில், பின்னர் சமூகப் பரவலும் அதிகரித்து வந்தது. ஆனால், தற்போது அந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் நடப்புக்கு வந்த பிறகு சமூகப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று உறுதி செய்யப்பட்ட சம்பவங்களில் 51 ஏற்கெனவே அறிந்த கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்புடையவை; மற்ற 15 சம்பவங்கள் புதிய கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவை.
167 சம்பவங்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
அவற்றில் 141 சம்பவங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் உட்பட வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்போர் தொடர்பிலானவை.
அகாசியா ஊழியர் தங்கும் விடுதி, துவாஸ் வியூ தங்கும் விடுதி, 36 உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டை E1, காலாங் தங்கும் விடுதி, மரினா பே சேண்ட்சில் இருக்கும் பிளாக் டேப் பர்கர் உணவுக்கடை, 9 பினாங்கு ரோட்டில் இருக்கும் கட்டுமானத் தளம் ஒன்று, ஃபோரம் கேலரியா, லிடோ, பார்க்லேன் பகுதிகளில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஆகியவை புதிய குழுமங்களாக உருவெடுத்துள்ளன.
ஃபோரம் கேலரியா, லிடோ, பார்க்லேன், கேலாங் ஈஸ்ட் சென்றல் பகுதிகளில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பணிபுரியும் ஐவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் மருத்துவ வளாகங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த ஊழியர்களும் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டனர். அந்த உணவகங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 560 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சைபெற்று வரும் 976 பேரில் 31 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இங்கு இதுவரை அறுவர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 734 பேர் சமூக தனிமைப்படுத்தும் இடம் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் சிங்கப்பூரில் இதுவரை எண்மர் உயிரிழந்துள்ளனர்.
#சிங்கப்பூர் #கொவிட்-19


