சிங்கப்பூரில் முகக்கவசம் கட்டாயமாகிறது; மீறினால் அபராதம்

சிங்கப்பூரில் முகக்கவசம் கட்டாயமாகிறது; மீறினால் அபராதம்

2 mins read
93613d2f-9d76-4c1b-a61c-0087a6195bb9
அப்படி முகக்கவசம் அணியாமல் முதன்முறை பிடிபடுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமித்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, வெளியில் செல்லும்போது அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

அப்படி முகக்கவசம் அணியாமல் முதன்முறை பிடிபடுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும்.

மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கடுமையான உடற்பயிற்சி செய்வோருக்கும் கட்டாய முகக்கவசம் அணிவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்றைய காணொளி வழி செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

அதேபோல, ஓட்ட அல்லது மெதுவோட்டப் பயிற்சியில் ஈடுபடும்போது முகக்கவசத்தை அகற்றிக்கொள்ளலாம் என்றும் பயிற்சி முடிந்தபின் மீண்டும் அதை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வோங் கூறினார்.

அத்துடன், அத்தியாவசிய சேவைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள சேவைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்றும் கொரோனா கிருமித்தொற்றுக்கான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங் சொன்னார்.

வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட சிங்கப்பூர் ஊழியரணியில் 20 விழுக்காட்டினர் அத்தியாவசிய சேவைகளின்கீழ் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

"அத்தியாவசிய சேவைகளின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலை ஆராய்ந்து, முடிந்த அளவிற்கு அதை மேலும் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். நடமாட்டத்தைக் குறைத்து, மக்களை வீட்டிலேயே இருக்கச் செய்வதுதான் இதன் நோக்கம்," என்றார் அமைச்சர் வோங்.

இது தொடர்பான விவரங்கள் விரைவில் இறுதிசெய்யப்பட்டு, வெளியிடப்படும் என்றும் அவர் சொன்னார்.

முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு இருப்பது குறித்துக் கருத்துரைத்த அமைச்சர் வோங், இதை மக்கள் வெளியில் செல்வதை ஊக்குவிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெளிவுபடுத்தினார்.

"மக்கள் முடிந்த அளவிற்கு வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆனாலும், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக அல்லது வேறு அத்தியாவசியப் பணிகளுக்காக ஒரு சில நேரங்களில் வெளியில் போகவேண்டியது இருக்கலாம். அந்த நேரங்களில் முகக்கவசம் அணிந்தே வெளியில் செல்லவேண்டும்," என்று திரு வோங் விளக்கினார்.

கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளுக்குப் பலரும் இணங்கி நடப்பதாகவும் பூங்காக்கள், ஈரச் சந்தைகள் போன்ற கிருமி பரவ அதிக வாய்ப்புள்ள இடங்கள் இப்போது கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரே இடத்தில் அடைந்து கிடப்பதால் எரிச்சலும் சலிப்பும் ஏற்படுவதாக ஒரு சிலர் புகார் கூறியுள்ள நிலையில், இது தொடக்க காலம்தான் என்றும் இன்னும் குறைந்தது மூன்று வார காலம் இருக்கிறது என்றும் அமைச்சர் வோங் கூறினார்.

"நமது நடவடிக்கைகளை இரட்டிப்பாக்க வேண்டியிருப்பதால் வீட்டிலேயே இருங்கள்," என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த மாதம் 4ஆம் தேதியுடன் நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் முடிவுக்கு வந்தாலும் அதன்பிறகும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டியிருக்கலாம் என்றும் திரு வோங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்