வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் 1,800க்கு மேற்பட்ட சம்பவங்கள்: மண்டாய் லாட்ஜ் 1 விடுதியும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் 1,800க்கு மேற்பட்ட சம்பவங்கள்: மண்டாய் லாட்ஜ் 1 விடுதியும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது

2 mins read
6b3ccba7-5c5d-420b-8613-f88dff4accfb
மண்டாய் ரோட்டில் இருக்கும் மண்டாய் லாட்ஜ் 1 எனும் அந்த தங்கும் விடுதி தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் இன்று (ஏப்ரல் 16) முதல் தனிமைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் அறிவித்தார். படம்: லியன்ஹ சாவ் பாவ் -

கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அதிகரித்து வரும் நிலையில், இங்கு மற்றொரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மண்டாய் ரோட்டில் இருக்கும் மண்டாய் லாட்ஜ் 1 எனும் அந்த தங்கும் விடுதி தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் இன்று (ஏப்ரல் 16) முதல் தனிமைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் அறிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9வது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி இது. இங்கு வசிக்கும் ஊழியர்கள் 14 நாட்களுக்கு தங்களது அறைகளிலேயே சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நேற்று இரவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் அங்கு புதிதாக உறுதி செய்யப்பட்ட ஒரு கிருமித்தொற்று சம்பவத்தையும் சேர்த்து அங்கு மொத்தம் 7 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமைமுதல் கோச்ரேன் லாட்ஜ் 2 தனிமைப்படுத்தப்படுவதாக, அதற்கு முந்தைய நாள் அறிவிக்கப்பட்டது.

அட்மிரல்டி ரோடு வெஸ்ட் வளாகத்தில் இருக்கும் A முதல் E வரையிலான புளோக்குகள் தனிமைப்படுத்தப்பட்டன.

நேற்று அந்த கிருமித்தொற்று குழுமத்தில் மேலும் 11 பேருக்கு கிருமி தொற்றியதாக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு மொத்தம் 46 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

கோச்ரேன் லாட்ஜ் 1, அகாசியா லாட்ஜ், தெம்பனிஸ் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, சுங்கை தெங்கா லாட்ஜ், பொங்கோலில் உள்ள S11 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, வெஸ்ட்லைட் டோ குவான் மற்றும் டோ குவான் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி ஆகியவை தனிமைப்படுத்தப்பட்டுள்ள அத்தகைய விடுதிகள்.

நாட்டின் ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்துள்ள S11 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் மொத்தம் 797 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 447 கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவற்றில் 404 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தொடர்பிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிலவரப்படி அனைத்து வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் சேர்த்து, குறைந்தபட்சம் 1,800 பேருக்கு கிருமித்தொற்று உள்ளது.

குறிப்புச் சொற்கள்