சுடச் சுடச் செய்திகள்

2 மாதங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பங்ளாதேஷ் ஊழியர் பொதுப் பிரிவுக்கு மாற்றம்

சிங்கப்பூரின் 42வது கொவிட்-19 நோயாளியான 32 வயது பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த கட்டுமான ஊழியர், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.

இந்தத் தகவல் வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் இன்றைய (ஏப்ரல் 16) ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதுடன் அவருக்கு மயக்க மயக்க மருந்தும் அளிக்கப்படவில்லை என்று அந்தப் பதிவு குறிப்பிட்டது.

“தாமாகவே சுவாசிக்கும் நிலைக்கு வந்துள்ள அவருக்கு, பேச்சு சிகிச்சை இனி அளிக்கப்படும்,” என்று அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி கொரோனா கிருமித்தொற்று அறிகுறிகள் கண்ட அவர், பிப்ரவரி 7ல் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த நாள் அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் ஐந்து வெளிநாட்டு ஊழியர்களில் இவரும் ஒருவர். மற்ற நால்வரும் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த  ஊழியர்கள்தான்.

அவர்கள் அனைவரும் சிலேத்தார் ஏரோஸ்பேஸ் ஹைட்ஸ் கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் பம்பார்டியர் ஏவியேஷன் நிறுவனத்தின் விரிவாக்க கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள்.

அந்த மற்ற நான்கு பங்ளாதேஷ் ஊழியர்களும் மார்ச் 7ஆம்  தேதிக்குள்ளாகவே குணமடைந்து மருத்துவமனையிலிருந்து திரும்பினர்.

சிங்கப்பூரில், கிருமித்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில், ஆக அதிக நாட்கள் சிகிச்சை பெற்றவர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் இவர். அவருக்கு ஒரு நாளுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 64 வயது சிங்கப்பூர் ஆடவர்தான், இதுவரை ஆக அதிக நாட்கள் மருத்துவமனையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இந்த பங்ளாதேஷ் ஊழியர், கொவிட்-19 சிக்கல்களால் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா கிருமித்தொற்றிலிருந்து விடுபட்ட பிறகும் அவர் தொடர்ந்து தீவிர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார்.

சுவாசப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினை, நிமோனியா போன்றவற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக பங்ளாதேஷ் தூதரகம் முன்னர் குறிப்பிட்டிருந்தது.

அவர் சுயநினைவில்லாமல் இருந்த காலகட்டத்திலேயே, மார்ச் 30 அன்று, அவரது மனைவி பங்ளாதேஷில், ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ஊழியரின் உடல் நிலை குறித்து அணுக்கமாகக் கண்காணித்து வந்த வெளிநாட்டு ஊழியர் நிலையம், அவரது குடும்பத்தாருக்கும் அவரது முதலாளிக்கும் அடிக்கடி தகவல்களை வழங்கி வந்தது.

அவரது உடல்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஊழியரின் மனைவியும் நிறுவனமும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்ததாக நிலையம் தெரிவித்தது.

அந்த ஊழியர் மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு நல்வாழ்த்து தெரிவித்தோருக்கும் அவரது குடும்பத்தாருக்கு உதவியவர்களுக்கும் நிலையம் நன்றி தெரிவித்துக்கொண்டது.

“இந்த மிக நீண்ட காலப் போராட்டத்தில் மிகுந்த மன உறுதியுடன், வென்ற ஊழியரின் போராட்ட குணம் போற்றுதலுக்குரியது,” என்று நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon