சிங்கப்பூரில் மேலும் மூன்று வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷா லாட்ஜ் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, நார்த் கோஸ்ட் லாட்ஜ், துவாஸ் வியூ வெளிநாட்டு ஊழியர் தங்கும் விட்தி ஆகிய மூன்றும் தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் இன்று (ஏப்ரல் 17) முதல் தனிமைப்படுத்தப்படுவதாக நேற்று அரசிதழில் குறிப்பிடப்பட்டது.
இந்த மூன்றையும் சேர்த்து இதுவரை 12 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வசிப்போர் தங்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அங்கு ஏற்கெனவே கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
தாய் செங்கில் இருக்கும் ஷா லாட்ஜ் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நேற்று மேலும் நான்கு சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 28 ஆகியுள்ளது.
உட்லண்ட்சில் இருக்கும் நார்த் கோஸ்ட் லாட்ஜில் உள்ள 8 புளோக்குகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று புதிதாக 8 சம்பவங்கள் பதிவாகின; அங்கு மொத்தம் 26 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
துவாஸ் வியூ வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் உள்ள 20 புளோக்குக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று பதிவான 30 சம்பவங்களையும் சேர்த்து அங்கு 73 பேருக்கு கிருமித்தொற்று உள்ளது.
மண்டாய் லாட்ஜ் 1, கோச்ரேன் லாட்ஜ் 1, கோச்ரேன் லாட்ஜ் 2, அகாசியா லாட்ஜ், தெம்பனிஸ் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, சுங்கை தெங்கா லாட்ஜ், பொங்கோலில் உள்ள எஸ்11 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, வெஸ்ட்லைட் டோ குவான் மற்றும் டோ குவான் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி ஆகியவை தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்ற 9 விடுதிகள்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 728 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாலாயிரத்தைக் கடந்து 4,427ஆனது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90% அதாவது 654 பேர் விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள், விடுதிகளாக மாற்றி அமைக்கப்பட்ட மூன்று தொழிற்சாலைகள் ஆகிய ஐந்தும் புதிய குழுமங்களாக உருவெடுத்தன.
கடந்த இரு வாரங்களாக சமூகத்தில் கிருமிப்பரவல் கிட்டத்தட்ட நிலையாக இருந்து வருகிறது. ஆனால், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று வெகுவாகப் பரவியுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் 2,689 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பதிவான மொத்த சம்பவங்களில் இது சுமார் 60%.
சிங்கப்பூரிலும் உலக அளவிலுமான அண்மைய கொவிட்-19 செய்திகளுக்கு எங்களுடைய பிரத்தியேக செய்திப் பக்கத்தை நாடுங்கள்: www.tamilmurasu.com.sg/coronavirus


