வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுகாதார பராமரிப்புப் பொருட்கள் வழங்கீடு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுகாதார பராமரிப்புப் பொருட்கள் வழங்கீடு

2 mins read
1993316d-a8ba-4c68-81db-2b58df894162
தங்கும்விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் தங்கி இருக்கும் சுமார் 10,600 வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுகாதாரப் பராமரிப்புப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. முதல் தொகுதி பொட்டலங்களை வழங்கும் நிகழ்ச்சியில் என்டியுசி பொதுச் செயலாளர் இங் சீ மெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

தங்கும்விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் தங்கி இருக்கும் சுமார் 10,600 வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுகாதாரப் பராமரிப்புப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

முகக்கவசம், கை சுத்திகரிப்பான், சோப்பு, துணி உலர வைக்கும் கம்பிகள் ஆகியவை அந்தப் பொருட்களில் அடங்கும். இத்தகைய தங்கும்விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் ஊழியர்கள் மீது ஒருமித்த கவனம் செலுத்தும் வகையில் வெளிநாட்டு ஊழியர் நிலையம் தன் முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளது.

அவற்றின் ஒரு பகுதியாக இந்தப் பொருட்கள் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன.

தங்கும்விடுதிகளுடன் ஒப்பிடுகையில், விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கான வளங்கள் குறைவு என்பதை இந்த நிலையமும் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் நேற்று கூட்டறிக்கையில் தெரிவித்தன.

அவசரத் தேவையை மனதில் கொண்டு தங்கும்விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் தங்கி உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதலில் உதவிகளைச் செய்ய வெளிநாட்டு ஊழியர் நிலையம் முயற்சிகளை எடுத்து வருகிறது.

சிங்கப்பூரில் 1,100க்கும் மேற்பட்ட தங்கும்விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளும் இதர சிறிய வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களும் இருக்கின்றன. இவற்றில் சுமார் 120,000 ஊழியர்கள் தங்கி இருக்கிறார்கள். வெளிநாட்டு ஊழியர் நிலையம் தனது அடித்தள கட்டமைப்பின் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிகளை அதிகரித்து இருக்கிறது. அந்தக் கட்டமைப்பில் சுமார் 5,000 தூதுவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் வெளிநாட்டு ஊழியர்கள் என்று இந்த நிலையமும் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் அறிக்கையில் தெரிவித்தன.

இவ்வேளையில், கொவிட்-19 சூழலில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ அரசுசாரா அமைப்புகள் எடுக்கும் முயற்சிகளை ஒருமுகப்படுத்த வேண்டியது முக்கியம் என்பதை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்