பிரதமர் லீ: நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் தொடருவது அவசியம்

கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் அறிவித்து உள்ளார்.

நடப்பில் இருக்கும் அத்தகைய நடவடிக்கைகள் மே 4ஆம் தேதி முடிவடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமூகத்தில் கிருமிப் பரவல் எண்ணிக்கையைக் குறைக்க மேலும் நான்கு வாரங்களுக்கு அவற்றை நீட்டிப்பது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

ஊழியர்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் நோக்கில் அத்தியாவசியச் சேவைகள் தவிர்த்து மேலும் சில வேலையிடங்கள் மூடப்படும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பாக பிரதமர் நேற்று (ஏப்ரல் 21) நான்காவது முறையாக நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், “கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் அறிமுகமான இரண்டாவது வாரத்தில் இருக்கிறோம். மக்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். நம்மில் பெரும்பாலானோர் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி, வீட்டிற்குள்ளேயே இருந்து நமக்குரிய பங்கை ஆற்றியிருக்கிறோம். உள்ளூர் சமூகத்தில் தினமும் பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை படிப்படியாக 30க்குக் கீழ் குறைந்து உள்ளது. கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகளின் பலனாகவும் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டதன் விளைவாகவும் இது சாத்தியமாகி உள்ளது.

“ஆயினும், பத்து நாட்களுக்கு முன்னர் நான் உங்கள் முன் பேசியதற்குப் பிறகு பதிவாகும் மொத்த எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று மட்டும் 1,100க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கிட்டத்தட்ட இவை எல்லாம் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கண்டறியப்பட்டு உள்ளன.

“தங்கும் விடுதிகளில் பெரிய அளிவலான எண்ணிக்கை பதிவாவது கடுமையான பிரச்சினை. நாம் அவர்களிடம் தீவிரமான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். காய்ச்சல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் மட்டுமின்றி அறிகுறி தென்படாதவர்களையும் பரிசோதிக்கிறோம். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பாலானோரிடம் வீரியம் குறைந்த அறிகுறிகளே காணப்பட்டன.

“அவர்கள் பொதுவாக இளையர்களாக இருப்பதால் இதில் வியப்பு எதுவும் இல்லை. மேலும் அதனால் அவர்கள் கொவிட்-19 கிருமியால் கடுமையான பாதிப்பிற்கு ஆளாவதுபோல் தெரியவில்லை.

“நமது மருத்துவர்கள், தாதியர், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அனைவரும் கடுமையாகப் பணியாற்றி பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து ஊழியர்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்கிறார்கள். நல்லவேளையாக, புதிதாகப் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பிராணவாயுவின் தேவையோ தீவிர பராமரிப்போ தேவைப்படவில்லை.

“இரண்டு மாதங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பங்ளாதேஷ் ஊழியர் சாதாரண சிகிச்சைக்கு மீண்டு வந்திருக்கிறார். அவரை நாம் கைவிடவில்லை. அவர் முழுமையாகக் குணமடைய இன்னும் சிறிது காலம் பிடிக்கும். அண்மையில் பிறந்த தமது மகனை அவர் விரைவில் காண்பார்.

“வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மருத்துவப் பராமரிப்பு வசதிகளை அதிகரித்து வருகிறோம். அவர்களில் மூத்த வயதினர் அதிகம் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர் என்பதால் அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.

“நமது வெளிநாட்டு ஊழியர்களுக்கு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். சிங்கப்பூ ரர்களைக் கவனிப்பதுபோல உங்களையும் நாங்கள் பார்த்துக்கொள்வோம். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் ஒத்துழைத்து வரும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

“உங்கள் சுகாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். உங்களுக்கு ஊதியம் கிடைக்கவும் உங்கள் குடும்பத்துக்கு பணம் அனுப்பவும் உங்களது முதலாளிகளுடன் இணைந்து செயல்படுவோம். மேலும் உங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தொடர்பில் நீடிக்க உதவிபுரிவோம்.

“தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் தவிர வேறு இரண்டு வெளிநாட்டு ஊழியர் குழுக்களையும் அணுக்கமாகக் கவனித்து வருகிறோம். கடைவீடுகள், தனியார் மற்றும் வீவக வீடுகளில் தங்கியிருப்போர் முதல் வகை. அடுத்ததாக, அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபட்டிருப்போர். இத்தகையோர் நோய்ப் பரவல் முறியடிப்பு காலத்திலும் வேலை செய்து சிங்கப்பூர் தொடர்ந்து இயங்க உதவி வருகிறார்கள். வீவக கட்டடங்களையும் உணவு நிலையங்களையும் சுத்தம் செய்வதிலும் நமது விரிவலை கட்டமைப்பு போன்ற உள்கட்டமைப்பைப் பராமரிப்பதிலும் ஈடுபட்டு வரும் இந்த ஊழியர்கள், தங்கும் விடுதிகளுக்குச் சென்று வந்தால் அங்கும் வெளியிலும் நோய் பரவ அவர்கள் காரணமாகிவிடுவார்கள். எனவேதான் இதுபோன்ற அத்தியாவசியப் பணி ஊழியர்களை தனியாக தங்க வைத்துள்ளோம்.

“நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தியாகங்கள் செய்து, நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கை விதிகளைக் கடைப்பிடித்ததன் விளைவாக சமூக அளவிலான கிருமிப் பரவல் எண்ணிக்கை அண்மைய நாட்களில் குறைந்து வந்துள்ளது. இருப்பினும் நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. அன்றாட பாதிப்பு எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து ஓரிலக்கத்திற்கோ அல்லது பூஜ்யத்திற்கோ கொண்டுவர வேண்டும். மேலும், யாரிடமிருந்து, எவ்வாறு பரவியது என்று அறியப்படாத கிருமித்தொற்றின் எண்ணிக்கையையும் நாம் கீழிறக்க வேண்டும்.

“நிலைமை எங்கே இட்டுச் செல்கிறது என்றும் இன்னும் எத்தனை நாள் கட்டுப்பாடு நீடிக்கும் என்றும் நீங்கள் கேட்கக்
கூடும். கொள்ளை நோய் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நோய்க்கான சிகிச்சையும் மருந்தும் கண்டு பிடிக்கப்படும் வரை ஓராண்டு காலம்கூட ஆகலாம். எனவே நாம் கவனமாகச் செயல்பட வேண்டி உள்ளது.

“இதுதொடர்பாக அடுத்து நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சுகள்நிலை பணிக்குழுவிடம் ஆலோசனை செய்தேன். வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் இருந்து விரிவான சமூகத்திற்குள் பரவினால் அதனை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவது, புதிய கிருமிப் பரவல் குழுமங்கள் உருவாவதையும் கையை மீறி நிலைமை செல்வதையும் தடுப்பது ஆகியவற்றை நாம் உறுதி செய்ய விரும்புகிறோம்.

“இவற்றைச் சாதிக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிலேயே இருங்கள் என்று எல்லா சிங்கப்பூரர்களையும் கேட்டுக்கொள்கிறோம். உணவு, மளிகைப் பொருட்கள் வாங்குவது போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். குழுவாகவோ குடும்பமாகவோ வெளியே செல்லாதீர்கள். உடற்பயிற்சியைக்கூட தனியாகவே உங்கள் அக்கம்பக்கத்தில் செய்யுங்கள்.

“இவற்றின் மூலமாக உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மற்ற எல்லாரையும் காக்க முடியும். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைத்து உங்கள் பங்கை ஆற்றுவீர்கள் என்று நம்புகிறேன். நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்,” என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

சிங்கப்பூரிலும் உலக அளவிலுமான அண்மைய கொவிட்-19 செய்திகளுக்கு எங்களுடைய பிரத்தியேக செய்திப் பக்கத்தை நாடுங்கள்: www.tamilmurasu.com.sg/coronavirus

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!