சிங்கப்பூரில் மேலும் 1,037 பேருக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூரில் மேலும் 1,037 பேருக்கு கிருமித்தொற்று

2 mins read
2a1990a7-b731-4fce-aceb-60ea520a080f
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 23) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 1,037 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,178 ஆகியுள்ளது.

புதிய சம்பவங்களில் 21 சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 1,016 பேரில் 967 பேர் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள்; 15 பேர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

விடுதிகளில் தங்கியிருக்காத, ஆனால் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் 32 பேரும் நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

நேற்று எட்டு புதிய கிருமித்தொற்று குழுமங்கள் அறிவிக்கப்பட்டன. பொங்கோலில் இருக்கும் எஸ்11 ஊழியர் தங்கும் விடுதி, 2,211 சம்பவங்களுடன் சிங்கப்பூரின் ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமாக இருந்தது.

நேற்றைய நிலவரப்படி, சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் சராசரி தினசரி எண்ணிக்கை 25ஆகக் கடந்த வாரத்தில் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த சராசரி 36ஆக இருந்தது.

சமூகத்தில், தொடர்பு கண்டறியப்படாத கிருமித்தொற்று சம்பவங்களும் குறைந்தன. கடந்த வாரத்தில் அந்த சராசரி தினசரி எண்ணிக்கை 17ஆகக் குறைந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அது 21ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதிகளுக்கு வெளியே தங்கியிருக்கும் வேலை அனுமதிச்சீட்டு கொண்டோரிடையேயும் கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று மேலும் 57 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று வரை மொத்தம் 896 பேர் கிருமித்தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 4,234 பேரில் 25 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருமித்தொற்று உள்ள, ஆனால், சீரான உடல் நலத்துடன் இருக்கும் 4,999 பேர் சமூக தனிமைப்படுத்தல் வசதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்