கொவிட்-19 சிகிச்சைக்காக சென்ற இந்திய ஊழியர், மருத்துவமனையின் படிக்கட்டு தளத்தில் அசைவின்றி கிடந்தார்; பின்னர் உயிரிழந்தார்

கொவிட்-19 சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய ஊழியர் ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனையின் படிக்கட்டு தளத்தின் அருகில் இன்று (ஏப்ரல் 23) காலை விழுந்து கிடந்ததாகவும், பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கு மாறானதாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த மரணம் குறித்து இன்று காலை 7.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது.

அந்த 46 வயது இந்திய ஆடவர் படிக்கட்டு தளத்தில் அசைவின்றி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது; காயங்களால் பின்னர் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது.

அந்த ஆடவர் கொரோனா கிருமித்தொற்றுகண்ட நோயாளி என்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.

ஆனால், கொவிட்-19ஆல் ஏற்பட்ட உடல்நல நெருக்கடியால் அவர் உயிரிழக்கவில்லை என்று அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், அந்த ஆடவரின் மரணம் மிகுந்த வருத்தத்துக்குரியது என்று குறிப்பிட்ட மனிதவள அமைச்சு, அந்த ஆடவரின் குடும்பத்தார், நிறுவனம், இந்தியத் தூதரகம் ஆகியோருக்கு தகவல் அனுப்பப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது.

உயிரிழந்த அந்த ஆடவர் கட்டுமானத் துறை ஊழியர் என்றும் 2009ஆம் ஆண்டு இங்கு வந்தது முதல் அவர் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவர் பணிபுரிந்த நிறுவனம் அதன் தொழிற்சாலையை விடுதியாக மாற்றியுள்ள நிலையில், அந்த வசிப்பிடத்தில் அவர் தங்கியிருந்தார். அது கடந்த 12ஆம் தேதி பார்வையிடப்பட்டது.

“அத்தகைய விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவானவர்களே அங்கு தங்கியிருந்தனர். அங்கிருந்த தூய்மை, காற்றோட்டம் போன்ற வசதிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் இருந்தன,” என்றது மனிதவள அமைச்சு.

அந்தச் சமயத்தில் அங்கு 9 பேர் மட்டுமே தங்கியிருந்தனர்.

உள்துறை அமைச்சர் கா. சண்முகம், மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோர் அந்த ஆடவருடன் தங்கியிருந்தவர்களைச் சந்தித்துப் பேசினர்.

வருத்தத்துடன் இருந்தாலும் ஊழியர்கள் அமைதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தங்களது நிறுவனம் தங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதே நிறுவனத்தில் பணி புரியும், அந்த ஆடவரின் உறவினர் ஒருவர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்குமாறு அந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

காணொளிப் பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடலின்போது, ஊழியர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால், மனிதவள அமைச்சின் உதவியை நாடலாம் என்று அமைச்சர் டியோ ஊழியர்களிடம் தெரிவித்தார்.

மேலும், ஊழியர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் அப்போது உறுதி அளித்தார்.

“அவர்கள் அனைவருக்கும் இது சிரமமான காலகட்டம். சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறோம். அவர்களைக் கவனித்துக்கொள்ள கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது இறுதிச் சடங்கு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து அறக்கட்டளை வாரியத்துடனும் அவரது குடும்பத்தாருக்கு ஆதரவு நல்க வெளிநாட்டு ஊழியர் நிலையத்துடனும் இணைந்து செயல்படுவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!