சிங்கப்பூரர்களைப் போலவே வெளிநாட்டு ஊழியர்களையும் கவனித்துக் கொள்வோம்: திரு மோடிக்கு உறுதி அளித்த பிரதமர் லீ

சிங்கப்பூரர்களைப் போலவே வெளிநாட்டு ஊழியர்களையும் கவனித்துக் கொள்வோம்: திரு மோடிக்கு உறுதி அளித்த பிரதமர் லீ

2 mins read
c643f896-97e6-446e-84a2-08f83102cfac
சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் நிலவும் கொவிட்-19 நிலவரம் பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசி வழியாக உரையாடியதாக பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: பிரதமர் லீயின் ஃபேஸ்புக் பக்கம் -

சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் நிலவும் கொவிட்-19 நிலவரம் பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று (ஏப்ரல் 23) தொலைபேசி வழியாக உரையாடியதாக பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன. மார்ச் மாத இறுதிவாக்கிலிருந்து இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 1.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட பெரிய தேசத்தில் நாடுதழுவிய ஊரடங்கு என்பது அவ்வளவு எளிதான முடிவல்ல என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் லீ.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூரர்கள் சிலர் அண்மையில் அழைத்து வரப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர் லீ, இந்தியாவின் உதவிக்கு பிரதமர் மோடியிடம் நன்றி தெரிவித்ததாகவும் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூரர்களைக் கவனித்துக்கொள்வது போலவே, இங்கு பணிபுரியும் இந்திய ஊழியர்களையும் கவனித்துக்கொள்வோம் என்று திரு மோடியிடம் உறுதியளித்ததாக பிரதமர் லீ தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது சொந்த நலன்களை விட்டுக்கொடுத்து இங்கு வந்து பணிபுரிகின்றனர் என்று பதிவிட்டுள்ள திரு லீ, அவர்கள் சிங்கப்பூருக்கு பங்களிப்புச் செய்திருப்பதாகவும் அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களைப் பார்த்துக்கொள்வதில் சிங்கப்பூரின் முயற்சிகளை பிரதமர் மோடி ஆமோதித்ததுடன் வெளிநாட்டு ஊழியர்கள் இதனை மறக்கமாட்டார்கள் என்று கூறியதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தார் பிரதமர் லீ.

விரிவான பொருளியல் தொடர்புகளுடன் இரு நாடுகளும் உத்திபூர்வ பங்காளிகள் என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு வகை செய்யும் வழங்கீட்டுச் சங்கிலியைத் தொடர்ந்து செயல்படுத்தி, கொவிட்-19 கொள்ளைநோயால் ஏற்பட்டுள்ள இந்தச் சவாலை ஒன்றிணைந்து சமாளிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்