அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு

2 mins read
a72d2169-7345-4a50-8a60-182ac4ede84c
மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற மலேசியரான திரு முகமது ரபிக் முகமது ஃபரூக் (இடது), பின்னால் அமர்ந்து பயணம் செய்த இந்திய ஊழியர் திரு சுல்தான் அப்துல் காதர் ரஹ்மான் கரீம் ஆகிய இருவரும் விபத்தில் உயிரிழந்தனர். படங்கள்: FAMILY OF MOHAMED RBIK BIN MOHAMED FAROOK AND COURTESY OF MR SULTHAN'S FAMILY -

வெளிநாட்டு ஊழியர்கள் இருவர் ஹவ்காங் அவென்யூ 3, ஏர்போர்ட் ரோடு ஆகியவற்றுக்கிடையிலான சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 25) அதிகாலை வேளையில் நிகழ்ந்த இந்த விபத்தில் இவ்விருவரும் சென்ற மோட்டார்சைக்கிள், ஒரு செடான் கார் ஆகியவற்றுக்கிடையே விபத்து நேர்ந்தது.

சம்பவம் குறித்து அன்று காலை 6 மணிக்கு போலிசுக்கு தகவல் கிடைத்தது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் 27 வயது மலேசியர்; அவருக்குப் பின்னால் அமர்ந்து சென்றவர் 33 வயது இந்திய ஊழியரான திரு சுல்தான் அப்துல் காதர் ரஹ்மான் கரீம்.

மோட்டர்சைக்கிளில் சென்று விபத்துக்குள்ளான இருவரும் சுயநினைவை இழந்த நிலையில் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரும் உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

காக்கி புக்கிட்டில் இருக்கும், தாங்கள் பணியாற்றிய ரொட்டி பராட்டா கடைக்கு அவ்விருவரும் சென்றதாக திரு சுல்தானின் உறவினரான திரு கலண்டார் மரைக்காயர் முகமது ரியாஸ், 36, தெரிவித்தார்.

செடான் காரை ஓட்டிவந்த ஆடவர் ஈனோஸ் லிங்கிலிருந்து ஹவ்காங் அவென்யூ 3ல் தடம்புரண்டு, கேபிஇ (பொங்கோல்) சாலையை நோக்கி ஏர்போர்ட் ரோட்டில் திடீரென வலப்பக்கம் திரும்பியதாக, சம்பவத்தை நேரில் பார்த்த திரு கலண்டார் தெரிவித்தார்.

தென்னிந்தியாவின் கோட்டைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த திரு சுல்தான், அவரது குடும்பத்தில் சம்பாதித்து வந்த ஒரே நபர் என்று குறிப்பிட்டார் திரு கலண்டார்.

நான்காண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்த திரு சுல்தானின் 22 வயது மனைவியும் இரண்டு வயது மகளும் கோட்டைப்பட்டினத்தில் வசிக்கின்றனர்.

திரு சுல்தானின் பெற்றோருக்கு 60 வயதுக்கு மேலாகிறது.

திரு சுல்தானின் இறுதிச் சடங்குக்காகவும் குடும்பத்தாருக்கு உதவவும் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் நிதி திரட்டில் ஈடுபட்டுள்ளனர்.

மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் திரு சுல்தானின் குடும்பத்தாருக்கு உதவ நிதி திரட்டுவதாக திரு கலண்டார் குறிப்பிட்டார்.

செடான் காரை ஓட்டிச் சென்ற 39 வயது ஆடவர் அபாயகரமான வாகனமோட்டி மரணம் விளைவித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

போலிஸ் விசாரணை தொடர்கிறது.

நன்கொடை வழங்க விரும்புவோர் திரு கலண்டாரை 85090786 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்