கொவிட்-19: சிங்கப்பூரில் மேலும் இரு மரணங்கள்

கொவிட்-19: சிங்கப்பூரில் மேலும் இரு மரணங்கள்

1 mins read
63225845-4813-4949-bfb5-971daf511ece
உயிரிழந்த இருவரும் 81 மற்றும் 82 வயதுடைய சிங்கப்பூர் ஆடவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு நேற்று (ஏப்ரல் 27) இரவு தெரிவித்தது.

உயிரிழந்த இருவரும் 81 மற்றும் 82 வயதுடைய சிங்கப்பூர் ஆடவர்கள். அவர்களையும் சேர்த்து, கிருமித்தொற்று பாதிப்பால் இங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம், உயிரிழந்த அவ்விரு ஆடவர்களின் குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு உதவி நல்கி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 799 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 764 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள். வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் 17 பேருக்கும் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 14 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள்.

அன்றாடம் 3,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு கூறியது. அவர்களில் பலருக்கு கொவிட்-19 நோய்க்கான அறிகுறிகள் இல்லை. தற்போது நிலவரப்படி, 21,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் (அதாவது தங்கும் விடுதிகளில் வசிக்கும் பதினைந்து பேரில் ஒருவர்) கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள மேலும் 35 பேர் நேற்று மருத்துவமனையிலிருந்து வெளியேறினர்.

குறிப்புச் சொற்கள்