‘வேலைகளைக் காட்டிலும் சம்பளத்தையே கொவிட்-19 அதிகம் பாதிக்கும்’

கொரோனா கிருமித்தொற்றால் சில்லறை வர்த்தகம், உணவு மற்றும் பானம், பொழுதுபோக்கு துறைகளில் உள்ள ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளாகும் அபாயம் அதிகம் இருந்தாலும், வேலை வாய்ப்புகளைவிட சம்பளத்தையே கிருமித்தொற்று அதிகம் பாதிக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த வர்த்தக நடவடிக்கை குறையும்போது, பொருளியலின் பொரும்பாலான துறைகளில் தொழிலாளர் தேவை குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்தாலும் கொரோனா கிருமித்தொற்றால் நிறுத்தப்பட்ட தொழில்துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளே அதிகம் பாதிக்கப்படும் என்று ஆணையம் இன்று (ஏப்ரல் 28) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

தங்கும் வசதி, சில்லறை வர்த்தகம் போன்ற சுற்றுலா தொடர்பான மற்றும் பயனீட்டாளர் சார்ந்த சேவைத் துறைகள், ஆகாயம் மற்றும் நிலப் போக்குவரத்து ஆகியவை இந்தக் கிருமித்தொற்றால் ஆக அதிகமாக பாதிப்படைந்துள்ளன.

சிங்கப்பூர் ஊழியரணியில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் இந்தத் தொழில்துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் கிருமித்தொற்றால் வலுவற்ற வளர்ச்சியைக் கண்டு வருகிறது என்றும் ஆணையம் சுட்டியது.

அனைத்துத் துறைகளிலும் வருமானம் குறையும்போது, சம்பளம், ஊழியர் எண்ணிக்கை குறைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிறுவனங்கள் தொழிலாளர் செலவுகளைக் குறைக்க வாய்ப்புள்ளது.

ஊதியம் தொடர்பான கழிவுகள், கடன் திட்டங்கள் போன்ற அரசாங்கத்தின் ஆதரவு நடவடிக்கைகள் இருந்தாலும், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சில நிறுவனங்கள், ஊழியர்களைச் சம்பளமில்லா விடுப்பு, வாரத்தில் சில நாட்கள் மட்டும் வேலை செய்வது போன்ற செலவு சமாளிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடும் என்றும் ஆணையம் விவரித்தது.

சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கலாம். சில துறைகளில் போனஸ் தொகைகள் குறைக்கப்படலாம். இவையெல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்த சம்பளத்தைப் பாதிக்கலாம்.

ஒருவேளை அரசாங்கம் அளிக்கும் ஆதரவு நடவடிக்கைகள் போதவில்லை என்றால், நிறுவனங்கள் குறைவான வேலை நேரம், ஊழியர்களுக்கு சம்பள வெட்டு ஆகியவற்றை முதலில் நடைமுறைப்படுத்திய பிறகுதான், கடைசியாக ஆட்குறைப்பைக் கையில் எடுக்கும் என்றும் ஆணையம் விளக்கியது.

ஆட்குறைப்பின் விகிதம் பற்றி சிங்கப்பூர் நாணய ஆணையம் விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஆட்குறைப்பு இந்த ஆண்டில் 45,600 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இது கடந்த பொருளியல் நெருக்கடிகளைக் காட்டிலும் உயர்வாக இருக்கும் என்றும் டிபிஎஸ் வங்கி நேற்று தெரிவித்தது.

வேலை ஆதரவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் வர்த்தகங்களுக்கு அளிக்கும் ஆதரவால், பெரிய அளவிலான ஆட்குறைப்பு நிகழாமல் தடுக்கலாம் என்றும் ஆணையம் கூறியது.

இதற்கு முன் நாம் சந்தித்த சார்ஸ் நோய்ப்பரவல், உலகப் பொருளியல் நெருக்கடி காலங்களில் அறிவிக்கப்பட்ட ஆதரவுத் திட்டங்களைக் காட்டிலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை ஆதரவுத் திட்டம் பெரியது, ஆற்றல்மிக்கது, குறித்த நேரத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனால் நிறுவனங்களை மூடுதல், ஆட்குறைப்பு அதிகரிப்பு போன்ற செயல்களின் விகிதம் குறையலாம் என்றும் ஆணையம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!