மருத்துவமனையில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியருக்கு 3 மகள்கள்; கலக்கத்தில் குடும்பம்

சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த கட்டுமானப் பணியாளர் திரு அழகு பெரியகருப்பன், 46, இந்தியாவில் இருக்கும் தம் குடும்பத்தாருடன் தொலைபேசி வழியாக நாள்தோறும் தொடர்பு கொண்டு வந்தார்.

தமது குடும்பத்தாருக்கு மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.

ஆனால், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 23) கூ டெக் புவாட் மருத்துவமனையின் படிக்கட்டு தளத்தில் அவர் அசைவின்றி கிடந்த தருணத்தில் அவரது விருப்பங்கள் எல்லாம் முடிவுக்கு வந்தன.

கொவிட்-19 சிகிச்சைக்காக அவர் கடந்த 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் நிகழ்வதற்கு முந்தைய நாள் மாலை தம் குடும்பத்தாருடன் அவர் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயரமான இடத்திலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கொவிட்-19 பாதிப்பால் ஏற்படும் உடல்நல நெருக்கடிகளால் அல்ல என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

அந்தமான் தீவுகளில் உள்ள சொந்த ஊரில் மனைவி பாஞ்சாலி மற்றும்16, 11, 6 வயதுகளில் மூன்று மகள்கள், மனைவியின் பெற்றோர் உட்பட ஏழு பேர் கொண்ட குடும்பத்திற்காக சிங்கப்பூரில் சம்பாதித்து வந்தார் திரு அழகு.

மதுரையைச் சேர்ந்தவர் திருமதி பாஞ்சாலி. 2002ஆம் ஆண்டில் அவர்களுக்குத் திருமணம் நடந்த பிறகு பாஞ்சாலியின் வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்வதற்காக அவர்கள் இருவரும் அந்தமானுக்கு குடி பெயர்ந்தனர்.

தம் கணவரின் மரணம் தங்களை நிலைகுலைய வைத்திருப்பதாக திரு அழகுவின் மனைவி பாஞ்சாலி, 40 குறிப்பிட்டார்.

“தினமும் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளும் அவர், குடும்பத்தைப் பற்றியே கேட்பார். மகள்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசுவார்,” என்று தமது கணவர் பற்றி திருமதி பாஞ்சாலி குறிப்பிட்டார்.

கடைசியாக, கடந்த புதன் கிழமை தொலைபேசி வழியாக கணவர் அழகு தம்மிடம் பேசியதாகச் சொன்ன அவர், அடுத்த நாள் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் தமது உறவினர் மூலம் கணவர் இறந்த செய்தி தெரியவந்தது என்றார்.

திரு அழகு பணிபுரிந்த நிறுவனம் இதுவரை தங்களைத் தொடர்புகொள்ளவில்லை என்று குறிப்பிட்ட திருமதி பாஞ்சாலி, செய்தித்தாள்கள் மூலம்தான் கணவரின் மரணம் பற்றித் தெரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். மேலும், தம் கணவருக்கு கொவிட்-19 இருந்தது பற்றி தமக்குத் தெரியாது என்று திருமதி பாஞ்சாலி ‘டுடே’ நாளிதழிடம் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூர் போலிஸ் படை திருமதி பாஞ்சாலியைத் தொடர்புகொண்டு திரு அழகு ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டாரா, கடன் பிரச்சினை இருந்ததா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டதாகவும் அப்படி எந்தப் பிரச்சினையும் இல்லை என்று திருமதி பாஞ்சாலி பதிலளித்ததாகவும் 'டுடேஆன்லைன்' செய்தி குறிப்பிட்டது.

இந்தச் சம்பவம் பற்றி மே மாதம் 8ஆம் தேதி மரண விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்வதாக போலிசார் தெரிவித்தனர்.

“ஒவ்வொரு நாளும் ஆவலுடன் தந்தையின் அழைப்புக்காகக் காத்திருப்பர் எம் மகள்கள்; இப்போது திடீரென்று தந்தை இல்லாத நிலை. முதல் இரண்டு மகள்களைத் தேற்ற முடியவில்லை; ஆனால், மூன்றாவது மகளுக்கு விஷயம் என்ன என்பதே புரியவில்லை,” என்று மகள்களின் மனநிலை பற்றிக் கூறினார் பாஞ்சாலி.

“வயதான எனது பெற்றோருக்கு மருத்துவச் செலவுகளும் உண்டு. நாங்கள் அனைவரும் என் கணவரின் சம்பாத்தியத்தையே சார்ந்திருந்தோம். இனிமேல் நிலைமையை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பது தெரியவில்லை,” என்று குறிப்பிட்டார் அவர். முதல் இரண்டு மகள்கள் பள்ளிகளில் படித்து வரும் நிலையில், மூன்றாவது மகள் இனிமேல்தான் பள்ளிக்கூடத்தில் சேர இருக்கிறார்.

பிள்ளைகளையும் பெற்றோரையும் பரமாரித்துக்கொண்டிருந்த இல்லத்தரசியான பாஞ்சாலி, குடும்பத்துக்காக சம்பாதிக்கும் பொருட்டு கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திரு அழகுவின் குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு உதவ முயற்சி செய்வதாகவும் ItsRainingRaincoats எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி வரும் சமூக நிறுவனத்தின் நிறுவனரான திருவாட்டி தீபா சுவாமிநாதன் குறிப்பிட்டார்.

“செய்தித்தாள்களில் வெளியானவை தவிர மற்ற விவரங்கள் தெரியாவிட்டாலும், இந்தச் சம்பவம் இதயத்தை நொறுங்கச் செய்வதாக இருக்கிறது,” என்று குறிப்பிட்ட திருவாட்டி தீபா, திரு அழகு இல்லாத நிலையில், 16 வயதான மூத்த மகள் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்ப பாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாகச் சொன்னார்.

படிப்பில் கெட்டிக்காரியான அந்த இளம்பெண், வேலைக்குச் செல்ல இன்னும் ஐந்து ஆண்டுகளாவது ஆகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்தக் குடும்பத்துக்கு உதவ பொதுமக்கள் முன்வருவர் என்று நம்பிக்கை தெரிவித்தார் திருவாட்டி தீபா.

அனைவரது ஆதரவுடனும் அந்தப் பெண் படித்து, வேலையில் அமர உதவ முடியும் என்று நம்புவதாகக் குறிப்பிட்ட திருவாட்டி தீபா, அதன் பிறகு, தாயையும் இளைய சகோதரிகளையும் அவர் பார்த்துக்கொள்வார் என்றும் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!