வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து, கிருமித்தொற்று கட்டுக்குள் வந்திருப்பதாக அறிவிப்பதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்று சுகாதார அமைச்சின் தலைமை சுகாதார அறிவியலாளர் பேராசிரியர் டான் சோர் சுவான் கூறியுள்ளார்.
பெரும்பாலான கிருமித்தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படும்போது புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு இன்று (ஏப்ரல் 30) அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் தெரிவித்தார்.
அந்த நிலையை அடைந்தாலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஊழியர் தங்குவிடுதிகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படமாட்டாது; சிலர் மற்றவர்களைவிட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் பேராசிரியர் டான்.
பரிசோதனைக்குட்பட்டு, கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட ஊழியர்கள் பணிக்குத் திரும்பலாம்; சமூகத்துடன் இணையலாம். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அவர்கள் பிரிக்கப்படுவர்.
விடுதிகளில் கிருமிப் பரவல் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்த பிறகே விடுதிகளில் அல்லது அவற்றின் பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலவரம் மீட்டுக்கொள்ளப்படும் என்றார் பேராசிரியர் டான்.
கிருமித்தொற்றால் குறைந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ள விடுதிகளில் தங்கியிருப்போர், அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லாதபட்சத்தில், கிருமிப் பரவல் நிகழாது என்று அதிகாரிகள் நம்பிக்கை பெறும்போது பணிக்கும் சமூகத்துக்கும் விரைவில் திரும்பக்கூடும்.
ஆனால், அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்ட விடுதிகளில் இந்த நிலை திரும்ப கூடுதல் நாட்கள் தேவைப்படலாம்.
இந்த விடுதிகளில் இருக்கும் பலருக்கு கிருமித்தொற்று நிலவரத்தை உறுதி செய்ய மீண்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் பேராசிரியர் டான்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அதிலிருந்து முறிலுமாக மீண்டு பணிக்கும் சமூகத்துக்கும் திரும்புவது பாதுகாப்பானதே என்றார் அவர்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட 43 விடுதிகளில் 38ல் தற்போது கிருமித்தொற்று குழுமங்கள் உள்ளன. விடுதிகளாக மாற்றியமைக்கப்பட்ட தொழிற்சாலைகளில் குறைந்தது 20ல் கிருமித்தொற்று குழுமங்கள் உள்ளன.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமான பொங்கோலில் இருக்கும் எஸ்11 ஊழியர் தங்கும் விடுதியில் 2,400க்கு மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று உள்ளது. மற்ற விடுதிகளில் 20க்கு குறைவான எண்ணிக்கை முதல் 900 வரையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இம்மாதம் 21ஆம் தேதி முதல் மே மாதம் 4ஆம் தேதிவரை வேலை உட்பட எங்கும் செல்லக்கூடாது என்று இம்மாதத் தொடக்கத்தில் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ குறிப்பிட்டிருந்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று உள்ள விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.
பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால் சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான கொவிட்-19 சம்பவங்கள் இன்னும் கண்டறியப்படுவதாக பேராசிரியர் டான் குறிப்பிட்டார்.
கிருமிப் பரவலைக் குறைக்கும் நோக்கில், பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் டான், "தடம் கண்டறிதல் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், இங்கு கிருமித்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருக்கக்கூடும்," என்றார்.

