கொரோனா கிருமி மக்களிடையே பரவும் சூழ்நிலை இருப்பதால் இவ்வாண்டிற்கான தேசிய தினக் கொண்டாட்டம் வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வழக்கத்திற்கு மாறாக மக்கள் ஒரே இடத்தில் பெருமளவில் ஒன்று கூடுவது இவ்வாண்டு தவிர்க்கப்படும் என்று நேற்று (மே 20) தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலாக மக்கள் வீடுகளில் இருந்தே தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன என்று அவர்கள் கூறினர்.
தேசிய தின அணிவகுப்பின் அங்கங்கள் பல குடியிருப்புப் பேட்டைகளில் நடத்தப்படும். அணி வகுப்புக் காட்சிகள் தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடகங்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும். சிங்கப்பூர் இவ்வாண்டு 55வது பிறந்த நாளைக் கொண்டாடவிருக் கிறது.
தேசிய கொடியை வானில் பறக்கவிடுவது, போர் விமானங்களின் சாகசக் காட்சிகள், வான்குடை வீரர்களின் சாகசம் போன்ற பாரம்பரியமான உற்சாகத்தைக் கிளப்பும் அங்கங்கள் இம்முறை முதல் முறையாக தீவு முழுவதும் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகள் கொவிட்-19 கிருமிக்கு எதிராகப் போராடும் முன்னிலை ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கும் விதத்தில் அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாட்டம், நாடு முழுவதும் ஒளிபரப் பப்படும் பிரதமரின் தேசிய தினச் செய்தியுடன் தொடங்கும். பாடாங்கில் நடைபெறும் அணிவகுப்பை அதிபர் பார்வையிடுவார்.
இதையடுத்து சிங்கப்பூர் முழு வதும் தேசிய கீதத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
அதே சமயத்தில் சிங்கப்பூர் கடற்படை, அரசாங்க அமைப்புகள் காட்சிகளைப் படைக்கும்.
மாலையில் போனவிஸ்தாவில் உள்ள 'த ஸ்டார் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டர்'ல் சிங்கப்பூரர்களின் படைப்புகள் இடம்பெறும்.
தேசிய தின அணிவகுப்புக்கு முத்தாய்ப்பாக நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வாணவேடிக்கை நடைபெறும்.
காலையிலும் மாலையிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இடையே சிங்கப்பூரர்கள் வீட்டில் இருந்து பங்கேற்கும் வகையில் பல நடவ டிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
தேசிய தின அணிவகுப்பின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட உடற்பயிற்சி, சமையல் போன்ற நடவடிக்கைகளில் சிங்கப் பூரர்கள் பங்கேற்று தேசிய உணர்வில் மிதக்கலாம்.
இவ்வாண்டு ஒவ்வொரு சிங்கப்பூரர், நிரந்தரவாச குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பை இலவசமாக வழங்கப்படும்.
இதற்கிடையே காணொளி வழியாக செய்தியாளர்களிடம் பேசிய இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் ஃபிரடெரிக் சூ, "கொவிட்-19 எங்களைத் தடுக்க முடியாது," என்றார்.
"நாங்கள் தொடர்ந்து தேசிய தினத்தைக் கொண்டாடுவோம். ஆனால் அது மாறுபட்டிருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார். இவ்வாண்டு தேசிய கல்வி நிகழ்ச்சிகள் அல்லது முன்னோட்டக் காட்சிகள் இருக்காது என்றும் அவர் தெரிவித் தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள்: https://tmsub.sg/online

