சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் 23வது நபர் உயிரிழப்பு; புதிய கிருமித்தொற்று குழுமமாக ஆரஞ்சு வேலி தாதிமை இல்லம்

சிங்கப்பூரில் நேற்று உறுதி செய்யப்பட்ட 448 கிருமித்தொற்று சம்பவங்களில் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளிடையே பாதிப்பு எண்ணிக்கை 13 என முந்தைய சில நாட்களைவிட அதிகமாக இருந்தது. 

அவர்களில் எழுவர், தாதிமை இல்லங்கள், பாலர் பள்ளி ஊழியர்கள் போன்றவர்கள். இந்தக் குழுவினரிடையே பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவற்றுள் நான்கு சம்பவங்கள் எண் 6 சீமெய் ஸ்திரீட் 3ல் உள்ள ஆரஞ்சு வேலி தாதிமை இல்லத்தில் வசிக்கும் 72 முதல் 97 வயதுக்குட்பட்டவர்கள் தொடர்பிலானது.

அனைத்து தாதிமை இல்லங்களிலும் கொவிட்-19 பரிசோதனைகள் செய்யப்படுவதன் அங்கமாக அந்த தாதிமை இல்லத்தில் மேற்கொண்ட சோதனையில் இந்தப் புதிய சம்பவங்கள் கண்டறியப்பட்டன.

நேற்றைய நிலவரப்படி, இதுவரை 10,200 இல்லவாசிகளுக்கு கிருமித்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.  இன்னும் 250 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளியாகாத நிலையில் இந்த நால்வருக்கு மட்டுமே கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த தாதிமை இல்லத்தின் ஊழியர்களுக்கு இம்மாதத் தொடக்கத்தில் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இம்மாதம் 8ஆம் தேதி முதல் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் அவர்கள் தங்கியுள்ளனர்.

நேற்று பதிவான மூன்று புதிய சம்பவங்கள் பாலர் பள்ளி ஊழியர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டன. இந்தப் பரிசோதனைகளில் சில புதிய சம்பவங்கள் கண்டறியப்படும் என்று எதிர்பார்த்ததாக  பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு நேற்று குறிப்பிட்டிருந்தது.

இம்மாதம் 15ஆம் தேதி பாலர் பள்ளி ஊழியர்களிடையே தொடங்கப்பட்ட கொவிட்-19 பரிசோதனைகளில் இதுவரை 10,400 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து ஊழியர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் பரிசோதனைகள் செய்து முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருமித்தொற்று கண்ட பீஷான் எம்ஆர்டி ஊழியரின் குடும்ப் உறுப்பினர்களில் நால்வருக்கு கிருமித்தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அந்தக் குழுமத்தைச் சேர்ந்த ஒருவர் கோச்ரேன் லாட்ஜ் IIவில் பணியாற்றியவர். 

இங் டெங்ஃ ஃபோங் பொது மருத்துவமனையின் உணவு விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த சிங்கப்பூரர் ஒருவர், ஜூரோங் பெஞ்சுரு தங்கும் விடுதிக்குச் சென்று வந்த சிங்கப்பூரர் ஒருவர், வேலை அனுமதிச் சீட்டுடன் இங்கு தங்கியிருக்கும் மற்றொரு நபர் என வேறு 3 புதிய கிருமித்தொற்று சம்பவங்களும் நேற்று உறுதி செய்யப்பட்டன.

இந்நிலையில், 73 வயதான சிங்கப்பூரர் (ஆடவர்) கிருமித்தொற்றால் உயிரிழந்த 23வது நபர். கொவிட்-19 தொடர்பான உடல்நல சிக்கல்களால் அவர் நேற்று உயிரிழந்தார். ஏப்ரல் 17ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட அவருக்கு உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு, தைராய்டு பிரச்சினை போன்றவை ஏற்கெனவே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையம் அவரது குடும்பத்தாருக்கு உதவி வருகிறது.

நேற்றைய 434 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் தொடர்பானவை.

கடந்த ஒன்பது நாட்களாக குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை, புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. நேற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 910.

நேற்றுவரை 12,108. பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 901 பேரில் 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

உலக அளவில் 5.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  சுமார் 333,000 பேர் உயிரிழந்தனர்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon