சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் மேலும் 642 பேருக்கு கொவிட்-19; இதுவரை 43 விழுக்காட்டினர் குணமடைந்தனர்

சிங்கப்பூரில் இன்று (மே 23) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 642 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,068 ஆகியுள்ளது.

புதிய சம்பவங்களில் அறுவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

சட்ட ரீதியிலான தேவைகளை நிறைவேற்றுவது, பணிக்காக வீட்டில் இருந்து பயன்படுத்த முடியாத சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுவது ஆகிய காரணங்கள் இருந்தால் மட்டுமே பணியாளர்கள் ஜூன் முதல் தேதிக்குப் பிறகு வேலையிடங்களுக்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்பதை தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று காலை தமது ஃபேஸ்புக் மீண்டும் வலியுறுத்தினார்.

அதன்படி, பலர் வீட்டிலிருந்தே பலர் பணியைத் தொடர்வார்கள் என்பதை இது குறிப்பிடுகிறது.

கொவிட்-19 நோய்ப்பரவலைக் கையாளும் அமைச்சர்கள் நிலை பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான திரு வோங், நிறுவனங்களும் மேலாளர்களும் இந்த புதிய நடைமுறைக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

வேலையிடத்துக்குச் சென்று பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், தினமும் வேலையிடத்துக்குச் செல்ல வேண்டுமா, வாரத்தின் சில நாட்கள் வீட்டிலிருந்து அவர்கள் பணியாற்ற முடியுமா என்பதை நிறுவனங்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார் அவர்.

நல்ல காற்றோட்டம், உயர் சுகாதாரத் தரம், பாதுகாப்பான இடைவெளி நடைமுறை ஆகிய வசதிகளுடன் பணிபுரியத் தேவையான சூழலை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் கிருமிப் பரவல் அதிகரிக்காமல் இருக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என்றார் அவர்.

சிங்கப்பூரில் நேற்று 838 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து 12,946 பேர் அதாவது கிருமித்தொற்று கண்டவர்களில் 43 விழுக்காட்டினர் குணமடைந்தனர்.

தொடர்ந்து பத்து நாட்களாக குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை, புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 798 பேரில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். விடுதிகளில் தங்கியிருக்கும் 323,000 வெளிநாட்டு ஊழியர்களில் 28,161, அதாவது 8 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் பாலர் பள்ளி பணியாளர்கள்; 610 பேர் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9.

உலக அளவில் 5.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  சுமார் 339,000 பேர் உயிரிழந்தனர்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon