கிருமி தொற்றிய இருவர் ஜூரோங்கில் ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, ஈரச்சந்தைக்குச் சென்றதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு

கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகள், கொரோனா கிருமி அவர்களிடமிருந்து பரவக்கூடிய உடல்நிலையில் இருந்தபோது, புளோக் 963 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 91ல் இருக்கும் ஈரச்சந்தை, ஜூரோங் பாயின்டில் இருக்கும் ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா ஆகிய இடங்களுக்குச் சென்றதாகவும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் அங்கு இருந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் ஜூரோங் பாயின்டில் உள்ள ஃபேர்பிரைஸ் கடை, ஷொகுட்சு டென் ஜப்பானிய உணவுக் கடை ஆகியவற்றின் பெயரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சு அறிவித்தது.

அந்த இடங்களுக்குச் சென்றவர்கள் தங்களது உடல் நலத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அணுக்கமாகக் கண்காணிப்பதுடன்,  அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட ஈரச் சந்தைக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர், இம்மாதம் 24ஆம் தேதி காலை 6 முதல் 8 மணி வரை சென்றிருந்தார். அதே நாளில் பிற்பகல் 1 முதல் 2 மணிக்குள்ளாக, கொரோனா கிருமித்தொற்று கண்ட ஒருவர் ஜூரோங் பாயின்ட் ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா கடைக்குச் சென்றிருந்தார்.

நேற்று (மே 26) சிங்கப்பூரில் 383 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர்; 30 வயதான அவருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அவர் பாலர் பள்ளி நிலைய ஊழியருடன் தொர்புடையவர் அல்ல.

மற்றொருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் மலேசியர். கொவிட்-19 உறுதி செய்யப்பட்ட மலேசியர் உயர் கல்விக் கழகத்தின் பணியாளர்.

மற்ற 381 பேர் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள்.

நேற்று குணமடைந்த 706 பேரையும் சேர்த்து, 50 விழுக்காட்டுக்கும் அதிகமான அதாவது மொத்தம் 16,435 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online