சிங்கப்பூரின் பொருளியலில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு: வர்த்தக, தொழில்துறை அமைப்புகள்

சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு வெளிநாட்டு ஊழியர்களிடையே அதிகம் இருப்பதைக் குறிப்பிட்டு, அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு கோரியவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, நாட்டின் பொருளியலுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் முக்கியம் என்பதை வர்த்தக குழுக்கள், சங்கங்கள் ஆகியன இணைந்து வெளியிட்ட அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.

உற்பத்தி, கடல் துறை, கட்டுமானத் துறை போன்ற துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களின் மதிப்பைக் குறிப்பிட்டு, அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது போன்ற கொள்கைகளை கவனமாக ஆராய வேண்டும் என்று அந்தக் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது உட்பட கடுமையான வெளிநாட்டு ஊழியர் கொள்கைகள் நடமுறைப்படுத்த வேண்டும் என்று சிலர் கோரியதைக் குறிப்பிட்டு, சிங்கப்பூர் இந்திய, மலாய், சீன இனத்தவரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறைச் சம்மேளனங்கள், வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பு மகத்தானது என்றும் அதனை அரசாங்கமே அங்கீகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டது.

“சில துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பில்லாமல் சிங்கப்பூரின் உள்ளூர் ஊழியரணியை மட்டும் கொண்டு நாம் போட்டித்தன்மையுடன் திகழ முடியாது,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

“வெளிநாட்டு ஊழியர்கள் உடலுழைப்பு தேவைப்படும் கீழ் மட்டத்தில் உள்ள பணிகளை மேற்கொள்வதால், பெரும்பாலான சிங்கப்பூரர்கள் பிஎம்இடி வேலைகளை எடுத்துக்கொண்டு கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலான பொருளியலை உருவாக்க முடிகிறது.

“இவற்றைக் கருத்தில் கொண்டு அரசாங்கமும் சிங்கப்பூரர்களும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று அந்தக் கூட்டறிக்கை தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரின் கட்டுமானத்துறை, கடல் துறை கப்பல் கட்டும் தளம் போன்ற துறைகளின் முதுகெலும்பு என்று குறிப்பிட்ட சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் சந்துரு, இந்த சிக்கலான காலகட்டத்தில் அவர்களை கவனித்துக்கொள்வது முக்கியம் என்றார்.

இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி சிங்கப்பூரில் வேலை அனுமதிச் சீட்டுடன் 720,800 வெளிநாட்டு ஊழியர்கள் (இல்லப் பணிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல்) உள்ளனர். அவர்களில் 287,800 கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள்.

‘எஸ் பாஸ்’ உடன் 194,900 பேர், எம்ப்ளாய்மென்ட் பாசில் 193,800 பேர் உள்ளனர்.

 Singapore Manufacturing Federation, Association of Singapore Process Industries, Association of Singapore Marine Industries ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், இங்கு வசிக்கும்  வெளிநாட்டு ஊழியர்களிடையே அவர்களுடைய முதலாளிகளுக்கு நல்ல மதிப்பு இருப்பதாகவும் சில ஊழியர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பணிபுரிவதுடன், அவர்களது உறவினர்கள், நண்பர்களையும் தாயகத்திலிருந்து இங்கு வந்து பணிபுரிய ஊக்குவிக்கின்றனர் என்று குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கை நிலை மோசமாக இருப்பதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்பதை இது காட்டுகிறது என்றும் அது குறிப்பிட்டது.

மூப்படையும் சமூகத்தைக் கொண்ட சிங்கப்பூரில், உள்ளூர் ஊழியர்களைப் பெற, சிங்கப்பூர் நிறுவனங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக அது குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காடு உற்பத்தித் துறையின் பங்களிப்பு. அந்த நிறுவனங்களில் உள்ள உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் பணிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் உதவுகின்றனர்.

உற்பத்தித் துறையினரிடையே அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்ற 75 விழுக்காட்டினர், வெளிநாடு ஊழியர்களின் இருப்பு அவசியம் என்று காட்டுவதாகக் குறிப்பிட்டது அந்த அறிக்கை.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online