ஜூரோங் வெஸ்ட், புக்கிட் பாஞ்சாங் பகுதிகளில் சந்தை, கடைகளுக்குச் சென்ற கொவிட்-19 நோயாளிகள்

புக்கிட் பாஞ்சாங்கில் இருக்கும் இரண்டு என்டியுசி ஃபேர்பிரைஸ் கடைகள், ஜூரோங் வெஸ்டில் இருக்கும் ஒரு சந்தை மற்றும் உணவங்காடி நிலையம் ஆகிய இடங்களுக்கு, கொரொனா கிருமிப் பரவல் கண்ட நபர்கள் சென்றிருந்ததாக சுகாதார அமைச்சு நேற்று (மே 27) தெரிவித்தது.

கொவிட்-19 நோயாளிகள் சுமார்  30 நிமிடங்களுக்கும் அதிகமாக இருந்த இடங்கள் பற்றிய தகவலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிப்பதன் மூலம், அந்த குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றவர்கள் அடுத்த 2 வாரங்களுக்கு உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணிக்க முடியும். அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனே மருத்துவரைக் காண வேண்டியது அவசியம்.

இம்மாதம் 17ஆம் தேதி கொரோனா கிருமித்தொற்று கண்ட ஒருவர், ஜூரோங் வெஸ்ட் சந்தைக்கும் புளோக் 505 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52ல் இருக்கும் உணவு நிலையத்துக்கும் காலை 9 முதல் 9.30 மணி வரை சென்றிருந்தார். 

அதே இடத்தில் இம்மாதம் 25ஆம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் வரை, கொரோனா கிருமித்தொற்று கண்ட மற்றொரு நபரும் சென்றிருந்தார்.

இம்மாதம் 24ஆம் தேதி ஹில்லியன் மாலில் இருக்கும் ஃபேர்பிரைஸ் கடைக்கு பிற்பகல் 12.30 முதல் 1 மணிவரை, கிருமித்தொற்று கண்ட ஒருவர் சென்றிருந்தார்.  

அதே நாளில் நண்பகல் முதல் பிற்பகல் 12.30 மணி வரை புக்கிட் பாஞ்சாங் பிளாசாவில் உள்ள ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட் கடைக்கு, கிருமித்தொற்று கண்ட ஒருவர் சென்றிருந்தார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள்https://tmsub.sg/online