சிங்கப்பூரில் மேலும் 373 பேருக்கு கொவிட்-19; அதில் சிங்கப்பூரர் மற்றும் நிரந்தரவாசி இல்லை

சிங்கப்பூரில் இன்று (மே 28) மேலும் 373 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட முதற்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அவர்களில் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள்.

இன்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் 33,249 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதார அமைச்சு நேற்றிரவு வெளியிட்டது.

சிங்கப்பூரில் நேற்று பதிவான 533 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் 4 மட்டுமே உள்ளூர் சமூகம் தொடர்பானவை; மூவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் சீன நாட்டவர்.

அறிகுறிகள் தென்படாமல் இருந்த இரண்டு சிங்கப்பூரர்கள் ஜூரோங் பெஞ்சுரு ஊழியர்விடுதி கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர்கள்; மற்றொரு சீங்கப்பூரரான 56 வயது பெண்ணுக்கு ஏற்கெனவே கண்டறியப்பட்ட குழுக்களுடன் தொடர்பு இல்லை. தொடர்பு தடமறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிருமித்தொற்று கண்ட சீன நாட்டவரான 33 வயது ஆடவர், 19 பண்டான் ரோடு, துவாஸ் டெர்மினல் ஃபேஸ் 1, ஜூரோங் போர்ட் ஆகிய இடங்களில் வேலைக்குச் சென்றிருந்தார்.

மற்ற 529 பேர் விடுதிகளில் தங்கியுள்ள ஊழியர்கள்.

832 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்தம் 53 விழுக்காட்டு நோயாளிக்ள் அதாவது 17,267 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 525 பேரில் எழுவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். சமூகப் பராமரிப்பு நிலையங்களில் 15,052 பேர் உள்ளனர்.

5 கிருமித்தொற்று சம்பவங்களுடன் 38 துவாஸ் வியூ ஸ்குவேர் புதிய கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். கிருமித்தொற்று கண்ட, ஆனால், வேறு உடல்நலப் பிரச்சினைகளால் இங்கு 9 பேர் உயிரிழந்தனர்.

உலக அளவில் கொரோனா கிருமித்தொற்றால்  5.78 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; சுமார் 357,000 பேர் உயிரிழந்தனர்.  

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள்https://tmsub.sg/online