சிங்கப்பூரில் மேலும் 451 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 7 புதிய சம்பவங்கள்

2 mins read
e662a614-7965-4dd2-afd8-b3906dfd5636
இன்று உறுதி செய்யப்பட்ட 451 கிருமித்தொற்று சம்பவங்களில் பெரும்பாலானவை விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் தொடர்பிலானவை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 10) நண்பகல் நிலவரப்படி புதிதாக 451 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,965 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 7 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் மூவர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி; நால்வர் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

ஏப்ரல் 11 அன்று பதிவான 191 சம்பவங்களுக்குப் பிறகு நேற்று உறுதி செய்யப்பட்ட 218 கிருமித்தொற்று சம்பவங்கள்தான் குறைந்த எண்ணிக்கையிலானவை.

நேற்று உறுதி செய்யப்பட்ட 6 சம்பவங்கள் உள்ளூர் சமூகத்தில் பதிவானவை. பாதிக்கப்பட்ட அனைவரும் வேலை அனுமதிச் சீட்டு கொண்டவர்கள். அவர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

அறுவரில் மூவர் கட்டுமான, கடல் துறைகளில் பணிபுரிபவர்கள். அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மற்ற மூவர் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் வசிப்பவர்கள். அரசாங்க தனிமைப்படுத்தல் வளாகங்களில் இருந்தபோது அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எஞ்சிய 212 பேர் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

சிங்கப்பூரில் இம்மாதம் 2ஆம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, கிருமித்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உள்ளூர் சமூகத்தினரிடையே கிருமித்தொற்று ஏற்படுவது கடந்த வாரத்தில் சராசரியாக 9ஆக உயர்ந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.

அதே போல, முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு 4 என உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 2ஆக இருந்தது.

நேற்று மேலும் 509 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதனையும் சேர்த்து இது வரை 25,868 பேர் குணமடைந்துள்ளனர்.

இது வரை கொரோனா கிருமித்தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்; கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக நீடிக்கிறது.

உலக அளவில் இதுவரை 7.31 மில்லியன் மக்கள் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 413,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்