சிங்கப்பூரில் இன்று (ஜூன் 11) நண்பகல் நிலவரப்படி புதிதாக 422 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39,387 ஆகியுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 5 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர்; நால்வர் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.
மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.
இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.
ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டதாகத் தெரிவிக்கப்பட்ட ஐந்து பள்ளி மாணவர்கள், ஒரு பள்ளி ஊழியர் ஆகியோருக்கு மீண்டும் செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டது தெரிய வந்திருப்பதாக நேற்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் ஐவர் வீடு திரும்பினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுவாசப் பிரச்சினைகள் கொண்ட 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த அறுவருக்கும் கிருமித்தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று உறுதி செய்யப்பட்ட 451 சம்பவங்களில் 7 சம்பவங்கள் உள்ளூர் சமூகத்தில் பதிவானவை. அந்த எழுவரில் ஐவருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. அமைச்சு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஐவரில் ஒருவர் சிங்கப்பூரர்; மற்ற நால்வரும் வேலை அனுமதிச் சீட்டு கொண்டவர்கள்.
வேலை அனுமதிச்சீட்டு கொண்ட நால்வரில் இருவர் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டவர்கள்; ஒருவர் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவருடன் வசித்தவர்; நான்காமவர், ஏற்கெனவே கிருமித்தொற்று குழுமமாக இருக்கும் ஹாய் லெக் எஞ்சினியரிங் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றியவர்.
நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று கண்ட மற்ற மூவரும் 38, 56, 67 வயதுகளில் இருக்கும் சிங்கப்பூரர்கள்.
எண் 31 சுங்கை காடுட் அவென்யூவில் இருக்கும் தங்கும் விடுதியில் பாதுகாவல் அதிகாரியாக இருக்கும் 56 வயது ஆடவருக்கு கிருமித்தொற்று அறிகுறி ஏதும் இல்லை. ஆனால், விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் வழி அவருக்கு கிருமித்தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட ஒருவரின் குடும்ப உறுப்பினரான 67 வயது ஆடவருக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் அறிகுறிகள் தென்பட்டன.
நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றாவது சிங்கப்பூரர், 38 வயதான தாதி. அவர் சிங்கப்பூர் தேசிய இயதய நிலையத்தில் பணிபுரிபவர். அவர் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இல்லை. அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்ட பிறகு அவர் பணிக்குச் செல்லவில்லை.
விடுதிகளில் தங்கியிருக்கும் 444 ஊழியர்களுக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
9 சுங்கை காடுட் ஸ்திரீட் 3, 113 துவாஸ் வியூ வாக் 1, 19A டெக் பார்க் கிரசென்ட் ஆகிய மூன்று புதிய தங்கும் விடுதி கிருமித்தொற்று குழுமங்களை சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
சிங்கப்பூரில் இம்மாதம் 2ஆம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, கிருமித்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உள்ளூர் சமூகத்தினரிடையே கிருமித்தொற்று ஏற்படுவது கடந்த வாரத்தில் சராசரியாக 9ஆக உயர்ந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.
அதே போல, முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு 4 என உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 2ஆக இருந்தது.
நேற்று மேலும் 655 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதனையும் சேர்த்து இது வரை 26,523 பேர் குணமடைந்துள்ளனர்.
இது வரை கொரோனா கிருமித்தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்; கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக நீடிக்கிறது.
உலக அளவில் இதுவரை 7.44 மில்லியன் மக்கள் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 418,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

