சிங்கப்பூரில் மேலும் 214 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு இன்று (ஜூன் 15) பிற்பகல் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 40,818ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக கொரோனா கிருமி தொற்றியவர்களில் மூவர் சமூகத்தில் இருப்பவர்கள். அம்மூவரும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். எஞ்சிய அனைவரும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
சுகாதார அமைச்சு இன்றிரவு வெளியிடவிருக்கும் செய்தி அறிக்கையில் மேல் விவரங்களைத் தெரிவிக்கும்.
கிருமித்தொற்று கண்டோரில் இதுவரை 26 பேர் உயிரிழந்துவிட்டனர். கிருமி தொற்றியும் வேறு காரணங்களால் பத்துப் பேர் மரணம் அடைந்துவிட்டனர்.
நேற்றைய நிலவரப்படி, 29,589 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வீடு அல்லது தங்குமிடம் திரும்பிவிட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருவர் உட்பட 238 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, வேறு ஓர் உடல்நலப் பிரச்சினைக்காக சிங்கப்பூருக்குச் சிகிச்சை பெற வந்த பங்ளாதேஷ் ஆடவருக்கு கொவிட்-19 கிருமி பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 10ஆம் தேதிக்குப் பிறகு, வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
கொரோனா தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று உறுதிசெய்த 407 பேரில் அந்த பங்ளாதேஷியரும் ஒருவர்.
இம்மாதம் 10ஆம் தேதி அவர் சிங்கப்பூருக்கு வந்தார். குடிநுழைவு அனுமதிக்காக அவர் அளித்த சுகாதார உறுதிமொழிப் படிவத்தில் தமக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் அந்நோய்த்தொற்று இருப்பதாக அல்லது சந்தேகிக்கப்படுவதாக மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆயினும், சிங்கப்பூரில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரை கொரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
சிங்கப்பூருக்கு வந்திறங்கியதும் வீட்டிலேயே இருப்பதற்கான ஆணை அவருக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும் தாம் தங்கியுள்ள இடத்தில் இருந்து மருத்துவ ஆலோசனை பெற மட்டுமே அவர் வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
தொடர்புகளின் தடமறியும் பணி தொடர்வதாகவும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக இதுவரை அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

