சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை முதல் இரண்டாம் கட்டத் தளர்வு

சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை முதல் இரண்டாம் கட்டத் தளர்வு

2 mins read
a151535c-1973-49a8-97c7-a6d25bd21cbd
உணவகங்களிலும் உணவங்காடி நிலையங்களிலும் அமர்ந்து உண்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதை அடுத்து, மேசைகளில் இருந்து ஒட்டுப்பட்டைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அதிகமான வர்த்தகங்கள், சமூக நடவடிக்கைகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் விதமாக வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து (ஜூன் 19) இரண்டாம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

இதையடுத்து, ஐந்து பேர் வரை ஒன்றுகூடவும் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஐந்து வருகையாளர்களை வரவேற்கவும் முடியும். அதே வேளையில், தனி நபர்கள் குறைந்தது ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

அது சாத்தியமில்லாத இடங்களில், குழுக்களுக்கு இடையே குறைந்தது 1 மீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் ஐவர் மட்டுமே இருக்க வேண்டும். குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கக்கூடாது.

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இன்றைய (ஜூன் 15) மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் இம்மாதம் 1ஆம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து, 2ஆம் தேதியில் இருந்து கட்டுப்பாடுகள் முதற்கட்டமாகத் தளர்த்தப்பட்டன. அதன்பின் இந்த இரு வார காலத்தில் சமூகத்தில் கொவிட்-19 கிருமிப் பரவல் நிலையாக இருந்து வருவதாக பணிக்குழுவின் இணைத் தலைவரும் சுகாதார அமைச்சருமான கான் கிம் யோங் குறிப்பிட்டார்.

அதேபோல, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்து வருகின்றன. புதிதாக பெரிய அளவிலான கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகவில்லை.

இதன் காரணமாக, அதிகமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் வகையில் இரண்டாம் கட்டத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், நடவடிக்கைகள் பாதுகாப்பாகத் தொடங்கப்பட வேண்டும் என்றும் குழுக்களின் அளவும் ஒரே நேரத்தில், ஓர் இடத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்ற வரம்பும் பேணப்பட வேண்டும் என்று பணிக்குழு எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்