செயல்பாடுகளை நிறுத்தும்படி ஏழு பணியிடங்களுக்கு உத்தரவு

செயல்பாடுகளை நிறுத்தும்படி ஏழு பணியிடங்களுக்கு உத்தரவு

2 mins read
7056e645-a31b-4220-b040-71df80aeed72
கொவிட்-19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் சரிவரப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, மனிதவள அமைச்சின் அதிகாரிகள் இதுவரை கிட்டத்தட்ட ஆயிரம் பணியிடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். படம்: மனிதவள அமைச்சு -

பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்ததால் ஏழு பணியிடங்களில் செயல்பாடுகளை நிறுத்தும்படி மனிதவள அமைச்சு உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, 52 நிறுவனங்களுக்குத் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகமான வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சமூகத்தில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் குறைவாக வைத்திருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

செயல்பாடுகளை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்ட ஏழு பணியிடங்களில் ஆறு இடங்களில் அளவுக்கு அதிகமான ஊழியர்கள் பணியில் இருந்தது கண்டறியப்பட்டது. வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் சாத்தியம் இருந்தும் அந்த ஊழியர்கள் பணியிடத்திற்குத் திரும்பி வேலை பார்த்துள்ளனர்.

இன்னோர் வேலையிடத்தில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியதில் பல குறைபாடுகள் காணப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

வேலை நடைமுறைகளில் இருந்த குறைபாடுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டதை அடுத்து, அந்த ஏழு பணியிடங்களும் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க அனுமதிக்கப்பட்டன.

கொவிட்-19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் சரிவரப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, மனிதவள அமைச்சின் அதிகாரிகள் இதுவரை கிட்டத்தட்ட ஆயிரம் பணியிடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.

அதிரடித் திட்டத்துக்குப் பிந்திய இரண்டாம் கட்டத் தளர்வு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, கூடுதலான வேலை இடங்கள் வரும் வெள்ளிக்கிழமை முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.

இருப்பினும், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான சாத்தியம் இருந்தால் ஊழியர்கள் தொடர்ந்து அவ்வாறே செய்யவேண்டும் என்று மனிதவள அமைச்சு வலியுறுத்தி இருக்கிறது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்