சிங்கப்பூரில் மேலும் 247 பேருக்கு கிருமித்தொற்று; சமூகத்தில் 5 சம்பவங்கள்

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 17) நண்பகல் நிலவரப்படி புதிதாக 247 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,216 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 5 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; மற்ற மூவரும் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

வரும் வெள்ளிக்கிழமை முதல் இரண்டாம் கட்டத் தளர்வுகள் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் நேற்று புதிதாக கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக இருந்தது.

கடந்த இரு மாதங்களில் பதிவான ஆகக் குறைவான தினசரி கிருமித்தொற்று எண்ணிக்கை இது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பதிவான கிருமித்தொற்று எண்ணிக்கை 142. அதற்குப் பிறகு தினசரி தொற்று எண்ணிக்கை அதிகமாகவே இருந்துவந்தது.

சுமார் 4,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியுள்ள மேலும் 42 தங்கும் விடுதிகள் கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டதாக மனிதவள அமைச்சு நேற்று அறிவித்தது.

உள்ளூர் சமூகத்தினரிடையே கிருமித்தொற்று  ஏற்படுவது கடந்த வாரத்தில்  சராசரியாக 7ஆக குறைந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 9ஆக இருந்தது.

ஜூன் முதல் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் முதல் கட்டமாக தளர்த்தப்பட்ட பிறகு ஜூன் 4 முதல் தினசரி கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அது படிப்படியாக சரியத்தொடங்கியது.

அதே போல, முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஆகியுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட உள்ளூர் சமூகத்துடன் வசிக்கும் இருவரும் 25, 39 வயதுகளில் இருந்த ஆடவர்கள். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் பரிசோதனைகளில் இவர்களுக்கு கிருமித்தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

அவர்களில் ஒருவருக்கு முன்பு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் கிருமித்தொற்றைப் பரப்பும் நிலை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவரையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை 26 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்தனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் வேறு காரணங்களால் 10 பேர் உயிரிழந்தனர்.

உலக அளவில் இதுவரை சுமார் 8.26 மில்லியன் மக்கள் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 446,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online