வெளிநாட்டு ஊழியர்கள் ஓய்வு நாட்களில் விடுதிகளிலேயே இருக்க வேண்டும்: மனிதவள அமைச்சு

சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட தளர்வுகள் நாளை (ஜூன் 19) முதல் நடப்புக்கு வரவுள்ள நிலையில், ஓய்வு நாட்களில் வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிகளிலேயே இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய கொவிட்-19 அலை ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலையிடங்கள் தவிர, ஊழியர்கள் வேறு இடங்களுக்குச் சென்றால் அது சமூகத்தில் கிருமிப் பரவலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அது தெரிவித்தது.

விடுதிகளிலும் சமூகத்திலும் கிருமித்தொற்று எண்ணிக்கை  நீண்ட காலத்துக்கு குறைவாக இருந்தால், கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட விடுதிகளில் வசிப்போர் மனமகிழ் நிலையங்கள் போன்ற அனுமதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சு தெரிவித்தது.

ஆனால், விடுதிகளில் இருக்கும் சமூக வசதிகளை ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தங்களது ஊழியர்களுக்கு விடுதிகளில் உணவு மற்றும் அன்றாட தேவைகள் வழங்கப்படுவதையும் முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.

இருப்பினும் வேலையிடங்களிலிருந்து கிருமித்தொற்றை விடுதிகளுக்கு கொண்டுவரும் வாய்ப்பு இருப்பதையும் அமைச்சு சுட்டிக்காட்டியது.

கிருமித்தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட வளாகங்களில் சுமார் 75,000 ஊழியர்கள் தற்போது வசித்து வருகின்றனர்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online