சிங்கப்பூரில் மேலும் 257 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 4 சம்பவங்கள்

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 18) நண்பகல் நிலவரப்படி புதிதாக 257 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,473 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 4 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி  ; மற்ற மூவரும் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட, உள்ளூர் சமூகத்துடன் வசிக்கும் ஐவரில் ஒருவர் சிங்கப்பூரர், ஒருவர் நிரந்தரவாசி மற்ற மூவரும் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.

அவர்களில் 58 வயதான சிங்கப்பூர் பெண், ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவரின் குடும்ப உறுப்பினர். தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட 23 வயது நிரந்தரவாச ஆடவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதுமில்லை. அவரது வேலை நிமித்தம் அவர், விடுதிகளில் பணியாற்றும் பாதுகாவல் அதிகாரிகளுடன் உரையாடவேண்டி இருந்தது. ஏற்கெனவே அறியப்பட்ட குழுமங்களுடன் அவர் தொடர்புபடுத்தப்படவில்லை.

கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட, வேலை அனுமதிச்சீட்டு கொண்ட மூவரில் இருவருக்கு ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பு அறியப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் செய்யும் முன்னெச்சரிக்கை பரிசோதனைகளில் மூன்றாமவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவரில் ஒருவருக்கு முன்பு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் கிருமித்தொற்றைப் பரப்பும் நிலை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவரையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை 26 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்தனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் வேறு காரணங்களால் 10 பேர் உயிரிழந்தனர்.

உலக அளவில் இதுவரை சுமார் 8.40 மில்லியன் மக்கள் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 451,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online