சிங்கப்பூரில் சமய நடவடிக்கைகள் தொடங்க அனுமதி

வழிபாட்டுத் தலங்களில் அதிகமான சமய நடவடிக்கைகளைப் படிப்படியாகத் தொடங்க அனுமதி அளிக்கப்படும்.

உடலளவிலான நெருக்கத்தைக் குறைக்கும் விதமாக தேவையான முன்னெச்சரிக்கையுடன் அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.

சமய, துணை ஊழியர்கள் தவிர்த்து, ஒரு நேரத்தில் 50 பேர் பங்கேற்கக்கூடிய கூட்டு வழிபாடுகளையும் மற்ற வழிபாட்டுச் சேவைகளையும் இம்மாதம் 26ஆம் தேதியில் இருந்து மீண்டும் தொடங்கலாம். 

இவ்விரு நடவடிக்கைகளையும் தொடங்குவதற்குக் குறைந்தது மூன்று நாட்களுக்கு முன் தங்களது பாதுகாப்பு நிர்வாகத் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட சமயத் தலங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை குறிப்பு ஒன்றின் மூலம் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.

ஊழியர்களைப் பணியமர்த்துதல், தனியாகவோ அல்லது ஐந்து பேருக்கு மிகாத குழுவாகவோ வழிபடும்போது வழிபாட்டாளர்கள் ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுவதை உறுதிசெய்தல், வழிபாட்டுச் சேவைகளை முடிந்த அளவிற்கு விரைவாக முடித்தல் உள்ளிட்டவை அந்தத் திட்டங்களில் அடங்கும்.

வழிபாட்டுச் சேவைகளின்போது பாட்டுப் பாடுதல் மற்றும் பிற நேரடி நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை. அதேபோல, வழிபாட்டு அல்லது மற்ற பொதுவான பொருட்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

குறைந்த காற்றோட்டமுள்ள, மூடிய இடங்களாக வழிபாட்டுத் தலங்கள் இருப்பின், சாத்தியமிருந்தால் சேவைகளுக்குப் பயன்படுத்திய பிறகு இயற்கையான காற்றோட்டம் இருக்கும்படி சன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைக்க வேண்டும்.

கூட்டு வழிபாடும் பிற வழிபாட்டுச் சேவைகளும் இடம்பெறும் நேரத்தில் மற்ற சமய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். 

ஆனாலும், 50 பேருக்கு மிகாமலும் அந்த வழிபாட்டுத் தலத்திலுள்ள இன்னோர் இடத்திலும் அவை நடக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

இருபது பேர் என்ற வரம்புடன் திருமண உறுதியேற்பு, துக்க அனுசரிப்பு, இறுதிச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளையும் வழிபாட்டுத் தலங்களில் நடத்திக்கொள்ளலாம்.

ஐந்து பேர் வரை பங்கேற்கும் சமயச் சடங்குகள், ஆன்மிகச் சேவைகள், சமய வகுப்புகள் போன்றவற்றையும் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படவுள்ளது. 

தொலைத்தொடர்பு வழிகள் மூலம் தங்களது சமூகங்களின் தேவைகளை நிறைவுசெய்வதைத் தொடரும்படி சமயத் தலங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. அதற்கு ஏதுவாக, சேவைகளையும் வழிபாடுகளையும் பதிவுசெய்யவும் ஒலிபரப்பவும் அவ்விடங்களில் பத்துப் பேர் வரை அனுமதிக்கப்படுவர்.

சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைவாகவும் நிலையாகவும் இருந்து, சமயத் தலங்களால் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த முடிந்தால் கூட்டு வழிபாட்டில் பங்கேற்போருக்கான  வரம்பை படிப்படியாக மேலும் உயர்த்த முடியும் என நம்புவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சமயச் சேவைகள் மீண்டும் தொடங்கவிருப்பதைக் குறிப்பிட்டு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், கடந்த சில மாதங்கள் சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை  வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வாண்டு சிங் மிங், புனித வெள்ளி, விசாக தினம், நோன்புப் பெருநாள் போன்ற திருநாள்களை மிகவும் மாறுபட்ட நிலையில் கொண்டாட வேண்டியிருந்தது. ஒரே வட்டாரத்தில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களைக் காண்பதுவும் பொதுநலனுக்காக நமது சமயத் தலைவர்கள் இணைந்து பணியாற்றுவதும் வழக்கத்திற்கு மாறானதல்ல. 

“குறிப்பாக, ஒரு நெருக்கடியின்போது, நம்முடைய பொதுவான அம்சங்களில் கவனம் செலுத்தி, இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான், அந்த நெருக்கடியில் இருந்து ஒரு சமுதாயமாக நம்மால் வலுவாக வெளிப்பட முடியும்,” என்றும் திரு ஹெங் தமது ஃபேஸ்புக் பதிவில் கூறி இருக்கிறார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online