கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, விடுதிக்கு திரும்பிய இந்திய ஊழியர் உயிரிழப்பு

கொரோனா கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து, ஊழியர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக விடுதிக்குத் திரும்பிய, இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் நேற்று (ஜூன் 23) காலை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் இதய நோய் காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், 48 வயது இந்திய ஊழியர் உயிரிழந்தது குறித்து குறிப்பிட்டது. அவருக்கு கொவிட்-19 கடந்த மே மாதம் 15ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மயக்கமடைந்த அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒருவர் உயிரிழப்பதற்கான அடிப்படைக் காரணமாக கொவிட்-19 இருந்தால் மட்டுமே அவரது மரணம் கொவிட்-19 மரணமாகக் கருதப்படும். உயிரிழப்புகளை வகைப்படுத்துவதில் அனைத்துலக நடைமுறைக்கேற்ப இவ்வாறு கடைபிடிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

இதற்கிடையே, நார்த்பாயின்ட் சிட்டியில் உள்ள சியோல் கார்டன் உணவகத்துக்கு கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட நபர் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கிருமித்தொற்று கண்ட ஒருவர் ஜூன் 19 அன்று இரவு 8.05 முதல் 9.40 மணி வரை அங்கு சென்றிருந்தார்.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நேரத்தில் அந்த உணவகத்துக்குச் சென்றவர்கள் அடுத்த இரு வாரங்களுக்கு உடல் நலனை கவனித்து, தேவைப்பட்டால் மருத்துவரின் உதவியை உடனடியாக நாடலாம்.

உள்ளூர் சமூகத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரில் ஒருவர் நிரந்தரவாசி; மற்ற இருவர் வேலை அனுமதிச் சீட்டு கொண்டவர்கள்.

இம்மூவருக்கும் கிருமித்தொற்று அறிகுறி ஏதுமில்லை. நிரந்தரவாசி ஊழியர் தங்கும் விடுதியில் பணிபுரிபவர்; மற்ற இருவரும் அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோர்.

பாதிக்கப்பட்ட நிரந்தரவாசிக்கு சில நாட்களுக்கு முன்பு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் தற்போது அவரால் கிருமி பரவும் சாத்தியம் இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த மூன்று சம்பவங்களும் ஏற்கெனவே கண்டறியப்பட்ட குழுமங்களு டன் தொடர்புடையவை அல்ல.

இம்மூவர் தவிர விடுதிகளில் தங்கியிருக்கும் 116 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இங்கு மொத்த எண்ணிக்கை 42,432 ஆகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட 106 கிருமித்தொற்று சம்பவங்களுக்குப் பிறகு, ஆகக் குறைவான எண்ணிக்கையிலான சம்பவங்கள் நேற்று பதிவாகின. கடந்த 7 நாட்களின் சராசரி கிருமித்தொற்று எண்ணிக்கையான 213ஐ விட நேற்றைய எண்ணிக்கை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் சமூகத்தினரிடையே கிருமித்தொற்று ஏற்படுவது கடந்த வாரத்தில் சராசரியாக 4ஆக குறைந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 7ஆக இருந்தது.

முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை கடந்த இரு வாரங்களில் 2ஆக நீடிக்கிறது.

சிங்கப்பூரில் இதுவரை 26 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்தனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் வேறு காரணங்களால் 11 பேர் உயிரிழந்தனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!